சாதாரண கடவுச்சீட்டுகளைக் கொண்ட இலங்கை மற்றும் தாய்லாந்து பிரஜைகள் இரு நாடுகளுக்கும் இடையில் விசா இன்றி பயணம் செய்வதற்கு அனுமதிக்கும் ஒப்பந்தமொன்று விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
தாய்லாந்தின் பிரதி பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான சிஹாசக் புவாங் கெட்கியோவின் உத்தியோகபூர்வ இலங்கை விஜயத்தின்போது இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அவர் நேற்று வெள்ளிக்கிழமை இலங்கையை வந்தடைந்தார். அவரது விஜயம் எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி வரை தொடரவுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரை வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர வரவேற்றார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பயணங்களை இலகுபடுத்துவதுடன், மக்களுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதும் இந்த விசா விலக்கு ஒப்பந்தத்தின் பிரதான நோக்கமாகும்.
தனது விஜயத்தின்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரைச் சந்திக்கவுள்ள தாய்லாந்து பிரதி பிரதமர், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடனும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளார்.
இதேவேளை, தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோர்னின் அரச பிரதிநிதியாக இலங்கை வந்துள்ள அவர், இன்று சனிக்கிழமை கண்டி அஸ்கிரிய மகா விகாரையில் நடைபெறவுள்ள அரச கதினை நிகழ்விலும் கலந்துகொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின் ஊடாக இலங்கை மற்றும் தாய்லாந்து இடையிலான வர்த்தகம், முதலீடு, சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும், விசா விலக்கு ஒப்பந்தம் இதுவரை கைச்சாத்திடப்படவில்லை என்பதுடன், அது நடைமுறைக்கு வரும் திகதி மற்றும் அமுலாக்கம் தொடர்பான மேலதிக விபரங்களும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.










