பொலிஸ் அதிகாரிகள் எனத் தம்மை அடையாளப்படுத்தி, வீதிகளில் பயணிப்போரை இடைமறித்து அச்சுறுத்தி பணம் மற்றும் பொருட்களைக் கொள்ளையிட்டதாகக் கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று புதன்கிழமை சீதுவை, பண்டாரவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 21 மற்றும் 27 வயதுடையவர்கள் எனவும், இருவரும் பண்டாரவத்தை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் சீதுவை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சீதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லியனகமுல்ல, அமந்தொலுவ, தம்பதுரய மற்றும் உடம்மிட்ட ஆகிய பகுதிகளில், பொலிஸார் எனக் கூறி பொதுமக்களிடமிருந்து பணம் மற்றும் உடைமைகளைக் கொள்ளையிட்ட ஆறு சம்பவங்களுடன் சந்தேகநபர்களுக்குத் தொடர்பு இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வீதிகளில் பயணிப்போரை இடைமறித்து, பொலிஸ் சோதனையில் ஈடுபடுவதைப் போன்று நடித்து அவர்களை அச்சுறுத்திய பின்னர் பணம் மற்றும் உடைமைகளைக் கொள்ளையிட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எதிரிசூரிய பகுதியில் இடம்பெற்ற பணக் கொள்ளைச் சம்பவம் ஒன்றுடனும் சந்தேகநபர்களுக்குத் தொடர்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் இன்று வியாழக்கிழமை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










