ஹபராதுவையில் இரு பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் 34 வயதுடைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹபராதுவை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று புதன்கிழமை ஹபராதுவை எரமுதுகஹ சந்திப்புப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 12.620 கிராம் ஐஸ் போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டவர் வஞ்சாவல பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபருக்கு எதிராக காலி மேல் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன், 2026 ஒக்டோபர் 8ஆம் திகதி இரு பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்திலும் அவருக்குத் தொடர்பு இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும், கடைகளை உடைத்து பொருட்களைத் திருடிய இரண்டு சம்பவங்கள் மற்றும் ஹபராதுவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட துவிச்சக்கரவண்டித் திருட்டுச் சம்பவம் ஆகியவற்றுடனும் சந்தேகநபருக்குத் தொடர்பு இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபராதுவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










