ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அவுஸ்திரேலியாவின் பெர்த், சீனா மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கான விமான சேவைகளை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி விபுல் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் புதிய விமானப் பாதைகளை உருவாக்குவதில் தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முன்னின்று செயற்பட வேண்டிய பொறுப்பு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், சுற்றுலா அமைச்சுடன் இணைந்து அண்மையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கான விமான சேவைகளை ஆரம்பிப்பதில் அதிக வாய்ப்புகள் காணப்படுவதாகக் குறிப்பிட்டார். அத்துடன், சீனாவுக்கான விமான சேவைகளையும் மீண்டும் ஆரம்பிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும், அதற்கான விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், நீண்டகாலமாக இடைநிறுத்தப்பட்டுள்ள ஆபிரிக்காவுக்கான விமானப் பாதைகளையும் மீண்டும் செயற்படுத்துவதற்கு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த விரிவாக்கத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மேலதிக விமானங்கள் தேவைப்படுவதால், வெளித் தரப்புகளிடமிருந்து விமானங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
புதிய விமானப் பாதைகளை ஆரம்பிப்பது ஆரம்பத்தில் வர்த்தக ரீதியாக அதிக இலாபத்தை ஈட்டக்கூடியதாக இல்லாவிட்டாலும், நாட்டின் சுற்றுலாத்துறை மற்றும் கொழும்பை ஊடாகப் பயணிக்கும் போக்குவரத்துச் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் தேசிய விமான சேவை நிறுவனம் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என மிஸ்ரா வலியுறுத்தினார்.
புதிதாக ஆரம்பிக்கப்படும் விமான சேவைகளில் ஆரம்பக் கட்டத்தில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம் எனவும் அவர் ஏற்றுக்கொண்டார். எனினும், புதிய விமானப் பாதைகளை முதலில் உருவாக்கி அவற்றுக்கான சந்தையை மேம்படுத்துவது அவசியம் எனவும், அதன் பின்னர் ஏனைய விமான நிறுவனங்களும் அந்தப் பாதைகளில் சேவைகளை ஆரம்பிக்க முன்வரும் எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையின் சுற்றுலாத்துறையின் நீண்டகால வளர்ச்சிக்கு புதிய சர்வதேச விமானத் தொடர்புகளை உருவாக்குவது இன்றியமையாதது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.










