நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு எதுவும் இல்லை என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், சில தரப்பினர் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கு மோதல் நிலைமையுடன் தொடர்புடைய இடையூறுகள் காரணமாக, எரிவாயுக் கப்பல் ஒன்று வருவதில் ஓரிரு நாட்கள் தற்காலிக தாமதம் ஏற்பட்டதே அண்மையில் எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்ட தாமதங்களுக்குக் காரணம் என அவர் விளக்கமளித்தார்.
நாட்டில் போதுமான எரிவாயு கையிருப்பு காணப்படுவதாகத் தெரிவித்த பிரதி அமைச்சர், பொதுவாக நாளொன்றுக்கு 80,000 எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் லிட்ரோ நிறுவனம், தற்போதைய தேவையைப் பூர்த்தி செய்வதற்காக நாளொன்றுக்கு 100,000 சிலிண்டர்களை விநியோகித்து வருவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், நாட்டுக்குத் தேவையான போதுமான எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்புகளும் பாதுகாப்பாக உள்ளதாக அவர் மேலும் உறுதியளித்தார்.










