கொழும்பு பொரளை, டட்லி சேனாநாயக்க மாவத்தையில் சேதமடைந்த பிரதான வடிகால் குழாயின் திருத்தப் பணிகள் 24 மணிநேரத்திற்குள் நிறைவடைந்துள்ளதாக கொழும்பு மாநகர முதல்வர் வ்ராய் கெலி பல்தசார் தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை குறித்த வீதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டமைக்கு, 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழைமையான அழுத்தத்தின் கீழ் இயங்கும் பிரதான வடிகால் குழாயில் ஏற்பட்ட கோளாறே காரணம் என அவர் சமூக ஊடகப் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மாநகர சபையின் வடிகால் பிரிவினர் உடனடியாகச் சம்பவ இடத்துக்குச் சென்று, பழைமையான உட்கட்டமைப்பு மற்றும் திருத்தப் பணிகளில் காணப்பட்ட சிக்கல்களுக்கு மத்தியிலும் குழாயைச் சீரமைக்கும் பணிகளை முன்னெடுத்ததாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
திருத்தப் பணிகளை 24 மணிநேரத்திற்குள் நிறைவு செய்த மாநகர சபை ஊழியர்களுக்கும் அவர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
“இது உங்கள் வரிப்பணம் செயற்படும் விதம்!” எனக் குறிப்பிட்ட மேயர், அத்தியாவசிய உட்கட்டமைப்பை மீளமைப்பதற்கு பொதுமக்களின் வரிப்பணம் பயன்படுத்தப்படுவதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
திருத்தப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதுடன், குறித்த வீதி வாகனப் போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.










