இலங்கையில் தேங்கியுள்ள 6 இலட்சத்து 50 ஆயிரம் வாகன இலக்கத் தகடுகள் மற்றும் 4 இலட்சத்து 50 ஆயிரம் சாரதி அனுமதிப்பத்திரங்களை அடுத்த ஆறு மாதங்களுக்குள் விநியோகித்து முடிக்கத் திட்டமிட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் துஷார இந்துனில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், ஐந்து மாவட்டங்களில் மோட்டார் சைக்கிள் பதிவுச் சேவை நிலையங்களை நிறுவுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் முதலாவது நிலையம் கம்பஹாவில் திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன், குருநாகல், அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலும் இதேபோன்ற நிலையங்களை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மோட்டார் சைக்கிள் பதிவுச் சேவையை எதிர்காலத்தில் ஏனைய வாகன வகைகளுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என துஷார இந்துனில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அத்துடன், வாகன இலக்கத் தகடுகளின் தரநிலைகள் தொடர்பிலும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.










