இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிப்பதுடன் நின்றுவிடாமல், நாட்டின் எதிர்காலப் பொருளாதார வளர்ச்சியிலும் பங்காளர்களாக இணையுமாறு சர்வதேச முதலீட்டாளர்களுக்கு கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவின் புதுடெல்லியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற NDTV World Summit 2026 மாநாட்டில், “இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு: மீட்சி, மீள்திறன் மற்றும் எதிர்காலப் பாதை” என்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வர்த்தகம், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி, தொழில்நுட்பம் மற்றும் திறமையான மனித வளம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இலங்கையைப் பிராந்தியப் பொருளாதார மையமாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவர் இதன்போது விளக்கினார்.
கைத்தொழில் அபிவிருத்தியை ஊக்குவிக்கும் நோக்கில், புதிதாக 18 கைத்தொழில் வலயங்களை நிறுவுவதற்கான திட்டம் குறித்தும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை நிறுவனங்களுடன் கூட்டாண்மைகளை உருவாக்குதல், தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் உற்பத்தித் திறனை விரிவுபடுத்துதல் போன்ற துறைகளில் வெளிநாட்டு நிறுவனங்களுக்குக் காணப்படும் வாய்ப்புகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தியா – இலங்கை கைத்தொழில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்திய அவர், உற்பத்திக் கைத்தொழில், விவசாயப் பெறுமதி சேர்த்தல், விநியோகச் சங்கிலிகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் பரஸ்பர நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.
மேலும், முதலீட்டுச் செயல்முறைகளை எளிமைப்படுத்துதல், அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் தெளிவான ஒழுங்குமுறை நடைமுறைகளை அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் முதலீட்டாளர்களுக்கு உகந்த வணிகச் சூழலை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு மாத்திரமன்றி, நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கும் பங்களிக்க சர்வதேச வர்த்தக சமூகத்தினருக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.










