பாரம்பரிய சிங்கள சாபப் பாடல்களான ‘வாஸ் கவி’ தொடர்பில் இளைஞர் ஒருவரிடம் தெமட்டகொடை பொலிஸார் விசாரணை நடத்தியதாக வெளியாகியுள்ள தகவல்களை இலங்கை பொலிஸார் மறுத்துள்ளனர்.
இது தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் 22ஆம் திகதியன்று அல்லது அதனை அண்மித்த காலப்பகுதியில், பாரம்பரிய சிங்கள சாபப் பாடல்கள் தொடர்பில் ஒருவரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்ததாகக் கூறும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, தெமட்டகொடை பொலிஸ் நிலையத்திலிருந்து அறிக்கையொன்று பெறப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
எனினும், இவ்வாறான பாடல்கள் தொடர்பில் எந்தவொரு முறைப்பாடும் கிடைக்கவில்லை என்றும், இந்த விடயம் தொடர்பாக எவரிடமிருந்தும் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை என்றும் தெமட்டகொடை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் சட்டத்தரணி ஒருவர் சமூக ஊடகங்களில் முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய, மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியுடன் (SJB) தொடர்புடைய குறித்த சட்டத்தரணி, அண்மையில் பௌத்த பிக்குகள் முன்னெடுத்த போராட்டத்தின்போது சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட பாரம்பரிய சிங்கள சாபப் பாடல்கள் தொடர்பில், ஒருவரை தெமட்டகொடை பொலிஸார் அழைத்து விசாரித்ததாக முன்னதாகக் குற்றம் சுமத்தியிருந்தார்.
வஜ்ரபாணி தெய்வத்தை வேண்டி ஆரம்பிக்கும் எனக் கூறப்படும் குறித்த பாடல் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.










