ஜப்பானின் ஐச்சி–நகோயாவில் நடைபெற்று வரும் 2026ஆம் ஆண்டுக்கான ஆசிய பரா விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை இன்று வெள்ளிக்கிழமை இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.
பெண்களுக்கான நீளம் பாய்தல் (T47) போட்டியில் பங்கேற்ற ஜனனி தனஞ்சனா விக்ரமசிங்க 5.52 மீற்றர் தூரம் பாய்ந்து தங்கப் பதக்கத்தை வென்றதுடன், போட்டியின் புதிய சாதனையையும் நிலைநாட்டியுள்ளார்.
அதேவேளை, ஆண்களுக்கான 1,500 மீற்றர் ஓட்டப் போட்டியில் (T46) பங்கேற்ற பிரதீப் சோமசிறி முதலிடத்தைப் பெற்று இலங்கைக்கு மற்றுமொரு தங்கப் பதக்கத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளார். ஆசிய நாடுகளின் வீரர்கள் கடும் போட்டியை வழங்கிய நிலையில், போட்டியின் ஆரம்பம் முதல் சிறப்பாக ஓடிய அவர், முதலிடத்தைத் தக்கவைத்து வெற்றியைப் பதிவு செய்தார்.
இந்தப் போட்டியில் இந்திய வீரர் வெள்ளிப் பதக்கத்தையும், பிலிப்பைன்ஸ் வீரர் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.
இவ்விரு வெற்றிகளின் மூலம் 2026ஆம் ஆண்டுக்கான ஆசிய பரா விளையாட்டுப் போட்டிகளில் இலங்கையின் பதக்க எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.










