இறக்குமதி நிறுவனங்களிடமிருந்து 84 இலட்சம் ரூபா இலஞ்சம் கோரிப் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணையில், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சாமர சம்பத் தசநாயக்கவை எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று வெள்ளிக்கிழமை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) நீதிமன்றத்தில் முன்வைத்த சமர்ப்பணங்களைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரையும் எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2022 செப்டெம்பர் 8ஆம் திகதி முதல் 2024 செப்டெம்பர் 23ஆம் திகதி வரையான காலப்பகுதியில், ஆரம்பக் கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்தபோது, உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் மூன்று நிறுவனங்களுக்கு பொஸ்பேட் இறக்குமதி உரிமங்களை வழங்குவதற்காக சாமர சம்பத் தசநாயக்க இலஞ்சம் பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதால், சந்தேகநபர்களைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு ஆணைக்குழு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.










