கட்டாருடனான பொருளாதார மற்றும் அபிவிருத்தி உறவுகளை மேலும் வலுப்படுத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவின் கட்டார் விஜயத்தின்போது, முதலீடு, வர்த்தகம், அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
கட்டார் வர்த்தக சம்மேளனத்துடன் இடம்பெற்ற சந்திப்பில், கொழும்பு துறைமுக நகரம், ரியல் எஸ்டேட் மற்றும் வளர்ந்து வரும் ஏனைய துறைகளில் கட்டார் முதலீடுகளை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இரு நாடுகளின் வர்த்தக சமூகங்களுக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவது மற்றும் தனியார் துறை ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, கட்டார் அபிவிருத்தி நிதியத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் சுகாதாரம், கல்வி மற்றும் வீடமைப்பு உள்ளிட்ட துறைகளில் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் உதவிகளுக்கு இலங்கை நன்றி தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் இலங்கையில் முன்னெடுக்கக்கூடிய புதிய அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் ஒத்துழைப்புக்கான துறைகள் குறித்தும் இரு தரப்பினரும் ஆராய்ந்துள்ளனர்.
மேலும், கட்டாரில் பணியாற்றும் இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி விடயங்களும் கலந்துரையாடப்பட்டுள்ளன. குறிப்பாக திறன் வாய்ந்த இலங்கைத் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது, தொழிலாளர் பாதுகாப்பை வலுப்படுத்துவது மற்றும் முறையான ஆட்சேர்ப்பு நடைமுறைகளை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கட்டாருடனான நீண்டகால உறவை வெளிநாட்டு வேலைவாய்ப்பைத் தாண்டி முதலீடு, அபிவிருத்தி, கடல் மற்றும் விமான இணைப்பு, எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளுக்கும் விரிவுபடுத்த இலங்கை எதிர்பார்ப்பதாக பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.









