இந்தியாவின் தேர்தல் ஆணையம் மீண்டும் கடும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் ஆணையத்தில், ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 தடவைகள் முக்கிய முடிவுகள் தொடர்பாக எழுத்துமூலம் எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளதாக “தி இந்தியன் எக்ஸ்பிரஸ்(The Indian Express)” வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வாக்காளர்களை பதிவு செய்தல், வாக்காளர் பெயர்களை நீக்குதல் மற்றும் மீளச் சேர்த்தல், வாக்காளர் பட்டியல் தரவுத்தளத்தின் பாதுகாப்பு உள்ளிட்ட தேர்தல் செயல்முறையின் முக்கிய அம்சங்களே இந்த எதிர்ப்புகளுடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில முடிவுகள் தங்களது அறிவு அல்லது ஒப்புதல் இன்றி எடுக்கப்பட்டதாக சந்து மற்றும் ஜோஷி சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. குறிப்பாக, புதிய வாக்காளர்களுக்கான Form 6 விண்ணப்பத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் மற்றும் வாக்காளர் பட்டியல் தரவுத்தளத்தின் கட்டுப்பாடு மத்திய மட்டத்தில் குவிக்கப்படுவது தொடர்பாக அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். வாக்காளர் பட்டியல் மென்பொருள் மற்றும் அதன் பாதுகாப்பு தொடர்பான கவலைகளை அவர்கள் இந்திய அரசின் உயர்மட்ட அதிகாரியான அமைச்சரவைச் செயலாளரிடமும் தெரிவித்ததாக The Indian Express தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம், இந்தியா முழுவதும் முன்னெடுக்கப்படும் ஸ்பெஷல் இன்டென்சிவ் ரிவிஷன்{Special Intensive Revision (SIR)} எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை தொடர்பாக ஏற்கனவே நிலவி வரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ளது. வாக்காளர் பட்டியலில் தகுதியற்ற பெயர்கள் இடம்பெறுவதைத் தடுப்பதும், உயிரிழந்தவர்கள், நாட்டை விட்டு வெளியேறியவர்கள் அல்லது வேறு இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர்களைச் சரிசெய்வதும் இந்த நடவடிக்கையின் நோக்கம் என தேர்தல் ஆணையம் கூறுகிறது. ஆனால், SIR நடவடிக்கையின் போது 13 கோடிக்கும் அதிகமான பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியல்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், தங்களது பெயர்கள் காணப்படவில்லை என பல வாக்காளர்கள் புகார் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த புதிய தகவல்களைத் தொடர்ந்து இந்திய எதிர்க்கட்சித் தலைவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும், தேர்தல் நடைமுறைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளனர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை தங்களது ஆதரவாளர்களை பாதிக்கும் வகையில் பயன்படுத்தப்படுவதாக முன்னதாகவே குற்றம்சாட்டி வந்த நிலையில், தேர்தல் ஆணையத்துக்குள் இருந்தே எதிர்ப்புகள் பதிவு செய்யப்பட்டதாக வெளியான தகவல் அந்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இக்குற்றச்சாட்டுகளை ஆளும் பாரதிய ஜனதா கட்சி நிராகரித்துள்ளதுடன், தேர்தல் ஆணையத்தின் மீது எதிர்க்கட்சிகள் நடத்துவது அரசியல் நோக்கமுடைய பிரசாரம் என தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், ஆணையத்துக்குள் மாறுபட்ட கருத்துகள் இருப்பது முடிவெடுக்கும் செயல்முறையின் இயல்பான ஒரு பகுதியாகும் என தெரிவித்துள்ளது. கடந்த ஓராண்டில் தேர்தல் ஆணையம் எடுத்த அனைத்து முக்கிய முடிவுகளும், SIR உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்களும் மூன்று ஆணையர்களின் ஒருமித்த முடிவுகளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டதாகவும் அது கூறியுள்ளது. அதேவேளை, இரண்டு ஆணையர்கள் பதிவு செய்த 14 குறிப்புகளின் இருப்பு அல்லது அவற்றின் உள்ளடக்கம் குறித்து தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவிக்கவில்லை என The Indian Express குறிப்பிட்டுள்ளது. இதனால், வாக்காளர் பட்டியல் திருத்தம், தரவுத்தளக் கட்டுப்பாடு மற்றும் தேர்தல் ஆணையத்தின் உள்நாட்டு முடிவெடுப்பு நடைமுறை தொடர்பான விவாதம் இந்தியாவில் தொடர்ந்து தீவிரமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.










