அமெரிக்காவில் Disney+ மற்றும் Hulu ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கான சந்தா கட்டணங்களை Disney நிறுவனம் மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த சேவைகளின் கட்டணம் நான்காவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளதுடன், விளம்பரங்கள் இல்லாத Disney+ Premium மற்றும் Hulu Premium திட்டங்களின் மாதக் கட்டணம் தலா 18.99 டொலரில் இருந்து 21.49 டொலராக, அதாவது 13 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
விளம்பரங்களுடன் கூடிய Disney+ மற்றும் Hulu தனிப்பட்ட திட்டங்களின் மாதக் கட்டணமும் 11.99 டொலரில் இருந்து 12.49 டொலராக உயர்த்தப்பட்டுள்ளது. அதேவேளை, விளம்பரங்களுடன் கூடிய Disney+ மற்றும் Hulu இணைந்த சந்தா 12.99 டொலராக தொடர்கிறது. விளம்பரங்கள் இல்லாத இரு சேவைகளின் இணைந்த சந்தா 19.99 டொலரில் இருந்து 21.99 டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய சந்தாதாரர்களுக்கு இந்த கட்டண உயர்வு செப்டம்பர் 23ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே சந்தா பெற்றுள்ளவர்களுக்கு, அடுத்த மாத கட்டணச் சுழற்சியிலிருந்து புதிய கட்டணம் அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் வாடிக்கையாளர்களை தனித்தனி சேவைகளுக்குப் பதிலாக இணைந்த சந்தா திட்டங்களைத் தேர்வு செய்ய ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளதாக தொழில்துறை செய்திகள் தெரிவிக்கின்றன.
Disney+ இன் விளம்பரங்கள் இல்லாத திட்டத்தின் கட்டணம் 2023ஆம் ஆண்டில் 10.99 டொலராக இருந்த நிலையில், தற்போதைய கட்டணம் அதைவிட கிட்டத்தட்ட இருமடங்காகியுள்ளது. இதேவேளை, அதிகரித்து வரும் உள்ளடக்கச் செலவுகள் மற்றும் ஸ்ட்ரீமிங் சேவைகளின் இலாபத்தை மேம்படுத்த வேண்டிய தேவைக்கு மத்தியில், முன்னணி ஸ்ட்ரீமிங் நிறுவனங்கள் தொடர்ச்சியாக சந்தா கட்டணங்களை உயர்த்தி வருகின்றன.










