வோக்ஸ்வாகன்(Volkswagen) நிறுவனம், சீன மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பெங்(Xpeng) உடன் இணைந்து உருவாக்கிய இரண்டாவது மின்சார வாகனத்துக்கான முன்பதிவை சீனாவில் தொடங்கியுள்ளது. ID. UNYX 09 என அழைக்கப்படும் இந்த புதிய மொடல், வோக்ஸ்வாகன்(Volkswagen) மற்றும் எக்ஸ்பெங்(Xpeng) இணைந்து உருவாக்கிய இரண்டாவது வாகனமாகும்.
ஐந்து இருக்கைகள் கொண்ட இந்த மின்சார செடான் வாகனம் 5 மீற்றருக்கும் அதிகமான நீளத்தைக் கொண்டுள்ளது. ஒற்றை மோட்டார் மற்றும் இரட்டை மோட்டார் என இரு வகைகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதுடன், இரட்டை மோட்டார் கொண்ட பதிப்பு நான்கு சக்கர இயக்கத்தைக் கொண்டிருக்கும். இரு பதிப்புகளிலும் CATL(சி ஏ டி எல்) நிறுவனத்தின் லித்தியம் இரும்பு பாஸ்பேட் (LFP) மின்கலங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த வாகனத்தில் எக்ஸ்பெங்(Xpeng) நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான VLA (Vision-Language-Action) ஸ்மார்ட் டிரைவிங் உதவி தொழில்நுட்பமும் AI உதவியாளரும் இடம்பெற்றுள்ளன. சீன சந்தைக்காக உள்ளூர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி புதிய மின்சார வாகனங்களை விரைவாக உருவாக்கும் வோக்ஸ்வாகன்(Volkswagen) நிறுவனத்தின் “China for China(சீனா சீனாவிற்கே)” அணுகுமுறையின் ஒரு பகுதியாக இந்த கூட்டாண்மை அமைந்துள்ளது.
வோக்ஸ்வாகன்(Volkswagen) மற்றும் எக்ஸ்பெங்(Xpeng) நிறுவனங்களுக்கிடையிலான மூலோபாய கூட்டாண்மை 2023ஆம் ஆண்டு ஆரம்பமானது. வோக்ஸ்வாகன்(Volkswagen), எக்ஸ்பெங்(Xpeng) நிறுவனத்தில் சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ததுடன், இரு நிறுவனங்களும் சீன சந்தைக்காக இரண்டு மின்சார வாகனங்களை இணைந்து உருவாக்க ஒப்புக்கொண்டன. இந்த கூட்டாண்மையின் முதல் மொடலான ID. UNYX 08 ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.










