தம்புள்ளையில் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையான 100 ரூபாய்க்கு விற்க வேண்டிய குடிநீர் போத்தலை 300 ரூபாய்க்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில், சுற்றுலா விடுதி ஒன்றுக்கு 500,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் (CAA) மாத்தளை மாவட்ட அலுவலகத்தைச் சேர்ந்த விசாரணை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
2025 ஜனவரி 2ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, 100 ரூபா என விலை குறிக்கப்பட்டிருந்த குடிநீர் போத்தல் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு நேற்று புதன்கிழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த நிறுவனம் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, நீதிமன்றம் 500,000 ரூபா அபராதம் விதித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த வழக்கில் குறிப்பிடப்படும் 100 ரூபா விலை, தற்போது நடைமுறையில் உள்ள குடிநீர் போத்தல்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை (MRP) அல்ல என நுகர்வோர் விவகார அதிகார சபை தெளிவுபடுத்தியுள்ளது.
2026 ஜூன் 10ஆம் திகதி வெளியிடப்பட்ட 2492/29ஆம் இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தலின் கீழ், உள்நாட்டில் பொதியிடப்படும் குடிநீருக்கான தற்போதைய அதிகபட்ச சில்லறை விலை போத்தலின் கொள்ளளவுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 500 மில்லிலீற்றர் முதல் 999 மில்லிலீற்றர் வரை 80 ரூபா, 1 லீற்றர் முதல் 1.499 லீற்றர் வரை 120 ரூபா, 1.5 லீற்றர் முதல் 1.999 லீற்றர் வரை 150 ரூபா, 2 லீற்றர் முதல் 2.499 லீற்றர் வரை 180 ரூபா மற்றும் 5 லீற்றர் முதல் 6.999 லீற்றர் வரை 400 ரூபா என அதிகபட்ச விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, தற்போது 1 லீற்றர் முதல் 1.499 லீற்றர் வரையிலான குடிநீர் போத்தலின் அதிகபட்ச சில்லறை விலை 120 ரூபா ஆகும்.
ஹோட்டல்கள், சுற்றுலா விடுதிகள், உணவகங்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் குடிநீர் கொள்வனவு செய்யும் போது, போத்தலின் கொள்ளளவுக்கு ஏற்ப நடைமுறையில் உள்ள அதிகபட்ச சில்லறை விலையை பரிசோதித்து, கொள்வனவுக்கான பற்றுச்சீட்டை பெற்றுக்கொள்ளுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை, நுகர்வோருக்கு அறிவுறுத்தியுள்ளது.
அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்ட பொருட்களை, அதிக விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என ஹோட்டல்கள், சுற்றுலா விடுதிகள், உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கும் நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.
அதிக விலைக்கு விற்பனை செய்தல் உள்ளிட்ட சந்தை முறைகேடுகள் தொடர்பில் 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு முறைப்பாடு செய்ய முடியும்.









