இலங்கையின் தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனமான NCE-யின் செப்டம்பர் மாத நிர்வாகக் குழு மற்றும் கவுன்சில் கூட்டங்களில், நாட்டின் ஏற்றுமதியாளர்கள் எதிர்கொண்டு வரும் முக்கிய சவால்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. ஏற்றுமதி வளர்ச்சியை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் கொள்கை ரீதியான தலையீடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கூட்டங்களில் ஏற்றுமதியாளர்களை பாதிக்கும் ஒழுங்குமுறை மற்றும் கொள்கை சார்ந்த பிரச்சினைகள், சந்தை அணுகலில் உள்ள தடைகள், விநியோகச் சங்கிலி பாதிப்புகள், அதிகரித்து வரும் செலவுகள், தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் இணக்கப்பாட்டு தேவைகள் உள்ளிட்ட விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. இப்பிரச்சினைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களிடம் பிரதிநிதித்துவங்களை முன்வைப்பதற்கான நடவடிக்கைகளும் கலந்துரையாடப்பட்டுள்ளன.
அதேவேளை, புதிய சர்வதேச சந்தைகளை அடையாளம் காணுதல், இலங்கை ஏற்றுமதிகளின் உலகளாவிய சந்தைப் பங்களிப்பை அதிகரித்தல் மற்றும் நாட்டின் ஏற்றுமதி போட்டித்திறனை மேம்படுத்துதல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வர்த்தக வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்காக வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சர்வதேச பங்காளிகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தை 2030ஆம் ஆண்டுக்குள் 36 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்த்தும் இலக்கை நோக்கி அரசாங்கமும் வர்த்தகத் துறையும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில், கொள்கைத் தீர்மானங்கள் மற்றும் நடைமுறை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டியதன் அவசியமும் தற்போது வலியுறுத்தப்பட்டு வருகிறது.









