மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் உட்பட 3 பேரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
2008ஆம் ஆண்டு கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் உறுப்பினர் உட்பட இருவர் காத்தான்குடியில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டமை மற்றும் வவுணதீவு கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டமை ஆகிய சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்தக் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் கூறி, ஏற்கனவே 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான மொஹமட் சிபான், மொஹமட் சகீத் ஆகியோரை கடந்த 2025 நவம்பர் மாதம் குற்றப்புலனாய்வுத் துறையினர் (CID) கைது செய்தனர்.
இந்த 5 முக்கிய மனிதக் கொலைகள் தொடர்பாகப் பிள்ளையான், இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகள் மற்றும் லண்டனில் உள்ள காத்தான்குடியைச் சேர்ந்த மொஹமட் பாய்ஸ் உட்பட 4 பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த 2026 ஜூன் 17ஆம் திகதி CIDயினர் வழக்குத் தாக்கல் செய்து அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தியதனைத் தொடர்ந்து, அவர்கள் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், குறித்த வழக்கு விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை திறந்த நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களான இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகள் மொஹமட் சிபான், மொஹமட் சகீத் ஆகியோர் நேரில் ஆஜர்படுத்தப்பட்டதோடு, பிள்ளையான் காணொளி மூலமாக ஆஜர்படுத்தப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து பிள்ளையான் உட்பட 3 பேரையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.










