இலங்கையின் மீன்வளத்துறை அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக 265 மில்லியன் ரூபா பெறுமதியான மானிய உதவித் திட்டத்தின் கீழ் 430 மின்சார மோட்டார் சைக்கிள்களை வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் மீன்பிடி, நீர்வாழ் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் டொக்டர் பி.கே. கொலித கமல் ஜினதாச ஆகியோருக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் மீன்பிடி அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரும் கலந்துகொண்டார்.
இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் தகவலின்படி, இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய இந்த மின்சார மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன.
இதன்படி, மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களம், தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை (NAQDA) மற்றும் தேசிய நீர்வாழ் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிறுவனம் (NARA) உள்ளிட்ட பல நிறுவனங்களில் பணியாற்றும் கள உத்தியோகத்தர்களுக்கு இவை பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.
இந்தத் திட்டத்தின் ஊடாக மீன்வளத்துறை அதிகாரிகளின் செயற்பாட்டுத் திறன் மற்றும் போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் மீன்பிடி சமூகங்களுடன் அதிகாரிகள் தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணுவதுடன், அவசரத் தேவைகளுக்கு விரைவாகச் செயற்படவும் முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) திட்டத்தின் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை இலக்குகளை அடைவதற்கும் இந்தத் திட்டம் பங்களிப்புச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அறிவிப்பின்படி, மீன்பிடித்துறை, வீடமைப்பு, சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான அபிவிருத்தி ஒத்துழைப்புத் திட்டங்களின் ஒரு பகுதியாகவே இந்த உதவியும் வழங்கப்படுகிறது.
மேலும், இலங்கையின் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் இந்தியாவின் அபிவிருத்தி உதவித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.










