முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், சரத் வீரசேகர, தாம் கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலுக்குச் சென்றபோது பதிவான சிசிடிவி காட்சிகள் திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டதாகக் குற்றஞ்சாட்டி, அந்த ஹோட்டலுக்கு எதிராக 100 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி சட்டக் கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.
ஒக்டோபர் 29ஆம் திகதியிடப்பட்ட குறித்த கடிதம், அவரது சட்டத்தரணிகளான பெரேரா செனவிரத்ன அசோசியேட்ஸ் ஊடாக அனுப்பப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 24ஆம் திகதி அவர் ஹோட்டலுக்குச் சென்றபோது பதிவுசெய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் திரிபுபடுத்தப்பட்டு, பல்வேறு சமூக ஊடகத் தளங்களில் பரப்பப்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த காட்சிகள், சரத் வீரசேகரவும் பௌத்த பிக்குவொருவரும் ஒரே நேரத்தில் அல்லது ஒன்றாக ஹோட்டல் அறைக்குள் நுழைந்ததாகத் தவறான தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள தோற்றம் முற்றிலும் தவறானது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பல பேஸ்புக் பக்கங்கள் மற்றும் யூடியூப் அலைவரிசைகளை நடத்துபவர்களுடன் இணைந்து ஹோட்டல் நிர்வாகம் குறித்த சிசிடிவி காட்சிகள் அல்லது புகைப்படங்களை வெளியிட்டுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அத்துடன், மற்றொரு பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட காணொளியொன்றில், அவரது செயலாளர் தொடர்பில் தவறான தகவல் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த நபர் முன்னாள் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் எனத் தவறாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அசல் சிசிடிவி பதிவுகள் ஹோட்டல் நிர்வாகத்தின் முழுமையான கட்டுப்பாட்டிலும் பொறுப்பிலும் இருந்ததாகவும், ஹோட்டலின் தொடர்பு இன்றி அவற்றை வெளியிட முடியாது என்றும் சட்டத்தரணிகள் வாதிட்டுள்ளனர்.
மேலும், சரத் வீரசேகரவின் அனுமதியின்றி குறித்த காட்சிகள் வெளியிடப்பட்டமை அவரது தனியுரிமையை மீறியுள்ளதாகவும், ஹோட்டலின் சொந்த தனியுரிமைக் கொள்கைக்கும் முரணானது என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
குறித்த காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, தாம் கடுமையான இணையவழித் துன்புறுத்தல்கள், மன உளைச்சல் மற்றும் நற்பெயருக்குப் பாதிப்பு ஆகியவற்றை எதிர்கொண்டுள்ளதாக சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, கடிதம் கிடைத்த ஏழு நாட்களுக்குள் சிசிடிவி காட்சிகளை அணுகியவர்கள், திரிபுபடுத்தியவர்கள் மற்றும் வெளியிட்டவர்கள் யார் என்பதை அடையாளம் கண்டு அறிவிக்குமாறும், குறித்த காட்சிகள் வழங்கப்பட்ட தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் தொடர்பான விபரங்களை வெளியிடுமாறும் ஹோட்டல் நிர்வாகத்திடம் கோரப்பட்டுள்ளது.
அத்துடன், இணையத் தளங்களில் வெளியிடப்பட்டுள்ள குறித்த காணொளிகளை நீக்குதல், காட்சிகள் திரிபுபடுத்தப்பட்டதாக ஏற்றுக்கொண்டு பகிரங்க விளக்கமளித்தல், எழுத்துமூல மன்னிப்புக் கோருதல் மற்றும் எதிர்காலத்தில் அனுமதியற்ற தகவல் வெளியீடுகள் இடம்பெறாது என்பதற்கான உறுதிமொழி வழங்குதல் ஆகிய கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறித்த கோரிக்கைகளுக்கு இணங்கத் தவறினால், மேலதிக அறிவித்தலின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவதூறு, தனியுரிமை மீறல், நற்பெயருக்குப் பாதிப்பு மற்றும் மன உளைச்சல் ஆகியவற்றுக்காக 100 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோருவதற்கான உரிமையைத் தாம் கொண்டுள்ளதாகவும் சரத் வீரசேகர எச்சரித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பில் பொலிஸார், இணையவழிப் பாதுகாப்பு ஆணைக்குழு மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றிலும் முறைப்பாடுகள் செய்யப்படலாம் என அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.










