கிளிநொச்சி வலைப்பாடு களப்புப் பகுதியில் சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட சுமார் 1,500 கடல் அட்டைகளுடன் சிறிய படகொன்றைக் கைப்பற்றிய இலங்கை கடற்படையினர், சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
இந்தக் கைது நடவடிக்கை நேற்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
வடமத்திய கடற்படைக் கட்டளையின் கீழ் செயற்படும் கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின்போது, குறித்த சிறிய படகு வழிமறிக்கப்பட்டு சோதனையிடப்பட்டுள்ளது.
இதன்போது, உரிய அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட சுமார் 1,500 கடல் அட்டைகள் படகில் கொண்டு செல்லப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட 35 வயதுடைய கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர், படகு மற்றும் கடல் அட்டைகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.










