16 வயதுக்குட்பட்ட தனது மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவருக்கு 54 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கம்பஹா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நேற்று வியாழக்கிழமை வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பில், குற்றஞ்சாட்டப்பட்டவர் மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 18 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மொத்தமாக 54 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 150,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 200,000 ரூபாய் இழப்பீடு வழங்குமாறும் குற்றவாளியான தந்தைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலதிகமாக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும், இழப்பீட்டுத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அனுபவிக்க வேண்டியிருக்கும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்பு மற்றும் விசாரணைப் பணியகம் முன்னெடுத்ததாகவும், சந்தேகநபரைக் கைது செய்து சட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.










