கொலைக் குற்றச்சாட்டில் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட இருவரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை இலங்கை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளதுடன், அவர்களுக்கு தங்காலை மேல் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையையும் உறுதி செய்துள்ளது.
ராஜபுரகே சுகத் வீரரத்ன மற்றும் ராஜமுனிகே நிஹால் சமிந்த என்றழைக்கப்படும் மகத்தயா ஆகிய இருவரும் விஜேமுனிகே குணவர்தன என்பவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.
நீதியரசர்களான ஜனக் டி சில்வா, மேனகா விஜேசுந்தர மற்றும் சம்பத் பி. அபேகோன் ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு, இன்று வெள்ளிக்கிழமை இந்தத் தீர்ப்பை வழங்கியது.
கோழி ஒன்றைத் திருடியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் ஏற்பட்ட தகராறே இந்தக் கொலைச் சம்பவத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது.
நீதிமன்ற விசாரணைகளின்படி, சம்பவத்தன்று உயிரிழந்த நபர், மற்றொரு கிராமவாசிக்குச் சொந்தமான கோழியைத் திருடியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து பகல் வேளையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, அன்றைய தினம் மாலை அவரது வீட்டிற்கு அருகில் வைத்து அவர் தாக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தை நேரில் கண்ட உயிரிழந்தவரின் தந்தை நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில், முதலாவது குற்றவாளி தனது மகனைக் கத்தியால் குத்தியதாகவும், இரண்டாவது குற்றவாளி அவரைப் பிடித்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலில் 11 கத்திக்குத்துக் காயங்களுக்கு உள்ளான அவர், சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், தமக்கு எதிரான குற்றத் தீர்ப்பை எதிர்த்து இரு குற்றவாளிகளும் மேன்முறையீடு செய்திருந்தனர். வழக்கின் பிரதான நேரடி சாட்சியாளர் முரண்பாடான சாட்சியங்களை வழங்கியதாகவும், விசாரணை நீதிமன்றம் தமது தரப்பு வாதங்களை முறையாகப் பரிசீலிக்கத் தவறியதாகவும் அவர்கள் தமது மேன்முறையீட்டில் சுட்டிக்காட்டியிருந்தனர்.
எனினும், உயிரிழந்தவரின் தந்தை வழங்கிய சாட்சியம் நம்பகத்தன்மை வாய்ந்தது என்றும், ஏனைய சாட்சியங்களும் மருத்துவ அறிக்கைகளும் அதனை உறுதிப்படுத்துவதாகவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தீர்ப்பை அறிவித்த நீதியரசி மேனகா விஜேசுந்தர, குறித்த நேரடி சாட்சியாளர் குறுக்கு விசாரணைகளின்போது தனது சாட்சியத்தின் நம்பகத்தன்மையைத் திருப்திகரமாக நிலைநாட்டியுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் மிகைப்படுத்தப்பட்ட தகவல்களை அவர் வழங்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உயிரிழந்தவரின் காயங்கள் தொடர்பான மருத்துவ ஆதாரங்களும் முறைப்பாட்டுத் தரப்பின் சாட்சியங்களை உறுதிப்படுத்துவதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
முறைப்பாட்டுத் தரப்பின் வழக்கில் நியாயமான சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர்த்தரப்பு வாதங்கள் அமையவில்லை என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, இருவரும் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை நிராகரித்த உயர் நீதிமன்றம், தங்காலை மேல் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை உறுதி செய்துள்ளது.
இந்தத் தீர்ப்புடன் நீதியரசர்களான ஜனக் டி சில்வா மற்றும் சம்பத் பி. அபேகோன் ஆகியோரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.










