2009ஆம் ஆண்டு கடலில் மூழ்கிய கப்பல் தொடர்பாக, அமனா தகாஃபுல் காப்புறுதி நிறுவனத்திடம் 700,000 அமெரிக்க டொலர் இழப்பீடு கோரி பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் ஃபைனான்ஸ் பிஎல்சி தாக்கல் செய்த மேன்முறையீட்டை இலங்கை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
நீதியரசர்களான மஹிந்த சமயவர்தன, டொக்டர் சோபித ராஜகருணா மற்றும் சம்பத் கே.பி. விஜேரத்ன ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய நீதியரசர் குழாம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
2009ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி, மாலைதீவுக் கொடியுடன் பயணித்த ‘எம்.வி. மெதுபாரு’ (M.V. Medhufaru) என்ற கப்பல் கடலில் மூழ்கியதைத் தொடர்ந்து இந்த வழக்கு உருவானது.
சவாஹில் லைன்ஸ் தனியார் நிறுவனத்துடனான குத்தகை ஒப்பந்தத்தின் கீழ், குறித்த கப்பலின் சட்டபூர்வ உரிமையைத் தக்கவைத்திருந்த பீப்பிள்ஸ் லீசிங் நிறுவனம், அமனா தகாஃபுல் நிறுவனத்திடம் கப்பலுக்கான காப்புறுதியைப் பெற்றிருந்தது.
கப்பல் இந்தியாவிலிருந்து மாலைதீவுக்குப் பயணித்தபோது கடுமையான பருவமழைக் காலநிலையை எதிர்கொண்டதால் மூழ்கியதாகக் குறிப்பிட்டு, 700,000 அமெரிக்க டொலர் இழப்பீட்டை பீப்பிள்ஸ் லீசிங் கோரியிருந்தது.
எனினும், கப்பல் கடற்பயணத்திற்குப் பொருத்தமற்ற நிலையில் இருந்ததாகவும், அதற்குத் தேவையான வகைப்பாட்டுச் சான்றிதழ் புதுப்பிக்கப்படவில்லை என்றும் தெரிவித்து அமனா தகாஃபுல் நிறுவனம் இழப்பீட்டுக் கோரிக்கையை நிராகரித்தது.
சுமார் 33 ஆண்டுகள் பழமையான குறித்த கப்பலில் அரிப்பு, அடிப்பகுதியில் துளைகள் மற்றும் தொடர்ச்சியான நீர்க்கசிவு போன்ற பாதிப்புகள் காணப்பட்டதாக உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், கப்பல் மூழ்குவதற்கு முன்னரே அதன் இந்திய கப்பல் பதிவகத்தின் (Indian Register of Shipping – IRS) வகைப்பாட்டுச் சான்றிதழ் 2008 செப்டெம்பர் மாதத்துடன் காலாவதியாகியிருந்ததுடன், அது புதுப்பிக்கப்படவில்லை என்பதையும் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
காப்புறுதி ஒப்பந்தத்தின் முக்கிய நிபந்தனையாகக் குறிப்பிடப்பட்டிருந்த வகைப்பாட்டைப் பேணத் தவறியமை, இழப்பீட்டுக் கோரிக்கையை நிராகரிப்பதற்குப் போதுமான காரணம் என நீதியரசர்கள் தீர்மானித்துள்ளனர்.
இஸ்லாமிய தகாஃபுல் காப்புறுதி முறையின் அடிப்படையில் ஒப்பந்த நிபந்தனைகளை அமனா தகாஃபுல் நிறுவனம் சுட்டிக்காட்ட முடியாது என்ற பீப்பிள்ஸ் லீசிங் நிறுவனத்தின் வாதத்தையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
தகாஃபுல் காப்புறுதியின் கோட்பாடுகள், இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்ட ஒப்பந்த நிபந்தனைகளை மீறுவதற்கு அனுமதிக்காது என நீதியரசர் டொக்டர் சோபித ராஜகருணா தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, 2018 ஒக்டோபர் மாதம் வர்த்தக மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதிப்படுத்திய உச்ச நீதிமன்றம், பீப்பிள்ஸ் லீசிங் நிறுவனத்தின் மேன்முறையீட்டை நிராகரித்துள்ளது. உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக வழக்குச் செலவுகளை வழங்கவும் உத்தரவிடப்படவில்லை.










