இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பற்றிக்கை, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் அதன் உப தலைவர் குருசுவாமி சுரேந்திரன் ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை (30) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது, அரசாங்கம் முன்வைத்துள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் (PSTA), ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல் சட்டமூலம் (OCB) ஆகியவற்றால் சிறுபான்மை மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ் மக்களின் அரசியல் தீர்வு, காணி அபகரிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், மனித உரிமை மீறல்கள், மாகாண சபைத் தேர்தல் தாமதம் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலளித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர், மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டியதன் அவசியம் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் பிரித்தானியா மிகுந்த அக்கறையுடன் அவதானித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.










