சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு அமைவாக குறித்த பிரேரணையில் திருத்தங்களை மேற்கொண்டு, ஒக்டோபர் 28ஆம் திகதிக்கு முன்னர் மீண்டும் சமர்ப்பிக்க எதிர்க்கட்சியினர் தவறியமையே இதற்குக் காரணம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நவம்பர் 3ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு, நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் முன்னதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் திருத்தப்பட்ட பிரேரணை சமர்ப்பிக்கப்படாததால், திட்டமிட்டபடி விவாதத்தை நடத்த முடியாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலாக, நவம்பர் 3ஆம் திகதி ஒத்திவைப்பு வேளை விவாதம் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு அமைவாக திருத்தப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கட்சியினர் சமர்ப்பித்தால், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் ஆரம்பமாவதற்கு முன்னர் அதனை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள அரசாங்கம் நேரம் ஒதுக்கக்கூடும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.










