ஐக்கிய தேசியக் கட்சி (UNP), தனது கட்சி உறுப்பினர் கட்டமைப்பை மறுசீரமைக்கும் நோக்கில் இளைய தலைமுறையினரைக் குறிவைத்து இரண்டு புதிய உறுப்பினர் பிரிவுகளை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
மில்லேனியம் ஐக்கிய தேசியக் கட்சி (Millennium UNP) மற்றும் ஜென் இசட் ஐக்கிய தேசியக் கட்சி (Gen Z UNP) ஆகிய இரண்டு புதிய பிரிவுகளும், கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
குறித்த கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க, இந்த இரண்டு பிரிவுகளின் பிரதிநிதித்துவத்தையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
கட்சியின் அறிவிப்பின்படி, 35 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்களை மில்லேனியம் ஐக்கிய தேசியக் கட்சிப் பிரிவு பிரதிநிதித்துவப்படுத்தும்.
அதேவேளை, 2000ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்த இளைஞர்களை ஜென் இசட் ஐக்கிய தேசியக் கட்சிப் பிரிவு பிரதிநிதித்துவப்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இரண்டு வெவ்வேறு தலைமுறையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உறுப்பினர் பிரிவுகளை அறிமுகப்படுத்திய முதல் அரசியல் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியே என அதன் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், பாரம்பரியமாக நடைமுறையில் உள்ள ஐந்தாண்டு தேர்தல் விஞ்ஞாபனங்களுக்குப் பதிலாக, 20 ஆண்டுகால அபிவிருத்தித் திட்டத்தை முன்மொழியும் கட்சியின் ‘பசுமை ஆவணம்’ (Green Paper) தொடர்பிலும் செயற்குழுக் கூட்டத்தில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அரசியல் கட்சிகள் தனித்தனியாகச் செயற்படுவதற்குப் பதிலாக, பொதுவான புரிந்துணர்வின் அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் ரணில் விக்கிரமசிங்க கூட்டத்தில் விளக்கமளித்துள்ளார்.
அரசியல் கட்சிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான முன்மொழியப்பட்ட பொறிமுறை தொடர்பிலும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விளக்கமளித்ததாக வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.










