பிறந்த குழந்தையின் எடையைத் தவறாக அளவிட்டதாகக் கூறி, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு எதிராக தந்தை ஒருவர் சுமார் இரண்டு ஆண்டுகளாக முன்னெடுத்த சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இதற்கமைய, குறித்த வைத்தியசாலை முறைப்பாட்டாளருக்கு 45,900 ரூபாவை இழப்பீடாக வழங்க வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) உத்தரவிட்டுள்ளது.
2024 ஜூன் மாதம் குறித்த வைத்தியசாலைக்கு எதிராக உத்தியோகபூர்வ முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலையில் செயலிழந்த நிலையில் இருந்த எடை அளவிடும் கருவி மூலம் தனது பிறந்த குழந்தையின் எடை அளவிடப்பட்டதாகவும், தவறான அளவீட்டின் அடிப்படையில் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் பரிந்துரைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மற்றுமொரு வைத்தியசாலையில் மீண்டும் குழந்தையின் எடை பரிசோதிக்கப்பட்டபோது, குறித்த வைத்தியசாலையில் பெறப்பட்ட அளவீடு தவறானது என்பது தெரியவந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கு ஆவணங்களின்படி, ஆரம்பத்தில் குறித்த வைத்தியசாலையில் மின்னணு எடை அளவிடும் கருவி மூலம் குழந்தையின் எடை 2.48 கிலோகிராமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது, குழந்தையின் எடை குறைந்துள்ளதாகக் கருதிய குழந்தை நல மருத்துவர், இரண்டு ஆய்வகப் பரிசோதனைகளைப் பரிந்துரைத்துள்ளார். அவற்றில் இரத்தத்தில் பிலிரூபின் அளவைப் பரிசோதிக்கும் பரிசோதனையும் உள்ளடங்கியிருந்தது.
இதனையடுத்து, பெற்றோர் குழந்தையை மற்றுமொரு வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மற்றொரு குழந்தை நல வைத்தியர் இரண்டு வெவ்வேறு எடை அளவிடும் கருவிகளைப் பயன்படுத்தி குழந்தையின் எடையைப் பரிசோதித்தபோது, 2.675 கிலோகிராம் எனப் பதிவாகியுள்ளது.
இரு வைத்தியசாலைகளிலும் பதிவான எடை அளவீடுகளுக்கு இடையிலான வித்தியாசத்தைத் தொடர்ந்து, எடை அளவிடும் கருவியின் துல்லியம் மற்றும் அதனால் ஏற்பட்ட மருத்துவச் செலவுகள் குறித்து பாதிக்கப்பட்டவர் நுகர்வோர் விவகார அதிகாரசபையில் முறைப்பாடு செய்துள்ளார்.
விசாரணையின்போது, வைத்தியசாலையில் எடை அளவிடும் கருவிகள் தொடர்பில் ஏற்கனவே பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக குழந்தை நல மருத்துவர் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடலின் பதிவையும் முறைப்பாட்டாளர் சமர்ப்பித்துள்ளார்.
மேலும், வைத்தியசாலையின் எடை அளவிடும் கருவிகள் மீளமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2024 ஆகஸ்ட் மாதம் அளவீட்டு அலகுகள், தரநிலைகள் மற்றும் சேவைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையும் வழக்கு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தப் பரிசோதனை அறிக்கையின்படி, குழந்தை நல வைத்தியர்கள் பயன்படுத்தும் ஆலோசனை அறைக்குள் செயலிழந்த எடை அளவிடும் கருவி ஒன்று தொடர்ந்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
இதற்கு மேலதிகமாக, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் அனுமதி நடைமுறைகள் மற்றும் அறையின் சுத்தம் தொடர்பிலும் முறைப்பாட்டாளர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
2024 ஜூன் மாதம் தனது மனைவிக்கு சிசேரியன் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர், கர்ப்பிணியான அவர் வைத்தியசாலையின் அனுமதி வழங்கும் பிரிவுக்கு அருகிலுள்ள பிளாஸ்டிக் கதிரையில் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாகக் காத்திருக்க வேண்டியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமது குடும்பத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த வைத்தியசாலை அறை முறையாகச் சுத்தம் செய்யப்படவில்லை என்றும் அவர் முறைப்பாடு செய்துள்ளார்.
எனினும், குறித்த வைத்தியசாலை தனது பொறுப்பை மறுத்திருந்த போதிலும், நோயாளிகளை அனுமதிக்கும் நடைமுறையில் தாமதங்கள் ஏற்பட்டிருக்கக்கூடும் என்பதையும், அறைப் பராமரிப்பில் தனிப்பட்ட தவறுகள் இடம்பெற்றிருக்கலாம் என்பதையும் ஏற்றுக்கொண்டதாக வழக்கு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கிடைத்த பின்னூட்டங்களைத் தொடர்ந்து வைத்தியசாலையின் வரவேற்புப் பகுதியில் உள்ள இருக்கைகளை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2003ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் 32ஆவது பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, அதிகாரசபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் வைத்தியசாலைக்கு எதிராக இழப்பீடு வழங்கும் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
2026 செப்டெம்பர் 7ஆம் திகதியிடப்பட்ட இந்த உத்தரவின்படி, 30 நாட்களுக்குள் இழப்பீட்டை வழங்குமாறு வைத்தியசாலைக்கு அறிவுறுத்தப்பட்டதுடன், உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறும் பட்சத்தில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.










