பிரசவத்தின்போது ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்படும் சமூக ஊடகப் பிரபலம் நயோமி சானின் மறைவுக்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி பால்ராஜ் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
குடும்பத்தினர் தெரிவித்த தகவலின்படி, பிரசவத்துடன் தொடர்புடைய சிக்கல்களைத் தொடர்ந்து நயோமி சான் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், அவரது மறைவு குறித்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சமூக ஊடகங்களில் தனக்குக் கிடைத்த பிரபலத்தன்மையை சமூகத்தில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்துவதற்குப் பயன்படுத்திய அவரது முயற்சிகளை அமைச்சர் பாராட்டியுள்ளார்.
குறிப்பாக, பெண்கள், சிறுமிகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு நயோமி சான் பங்களிப்பு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புகழையும் அங்கீகாரத்தையும் தேடுவதற்கு அப்பால் சென்று, முக்கியமான சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குத் தனது சமூக ஊடகத் தளத்தை நயோமி சான் பயன்படுத்தியதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவர் முன்னதாகப் பகிர்ந்துகொண்ட காணொளி ஒன்றை நினைவுகூர்ந்த அமைச்சர் சரோஜா, பெண்களின் பாதுகாப்பின் முக்கியத்துவம் மற்றும் பெண்களைப் பாதுகாப்பதில் சமூகத்துக்கு உள்ள பொறுப்பு குறித்து நயோமி எளிமையாகவும் அர்த்தமுள்ள வகையிலும் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டதை நினைவுகூர்ந்துள்ளார்.
இதேவேளை, நயோமி சானின் குடும்பத்தினருக்கும் அமைச்சர் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளதுடன், இந்த இழப்பைத் தாங்கிக்கொள்ளத் தேவையான மனவலிமையும் தைரியமும் கிடைக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.











