நாட்டில் அதிகரித்து வரும் உயிரிழப்புகள் மற்றும் கடுமையான வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற வாகன ஓட்டங்கள் தொடர்பான காணொளி ஆதாரங்களைப் பொதுமக்கள் வட்ஸ்அப் ஊடாக பொலிஸாருக்கு அனுப்புமாறு இலங்கை பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்காக 070-4755600 என்ற விசேட வட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவல்கள் மற்றும் காணொளி ஆதாரங்களின் அடிப்படையில் ஏற்கனவே பல சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அதிவேகமாக வாகனங்களைச் செலுத்துதல், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுதல் ஆகியவை உயிரிழப்புகள் மற்றும் கடுமையான வீதி விபத்துகளுக்கு முக்கிய காரணங்களாக உள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், அனுமதியற்ற மற்றும் ஆபத்தான மாற்றங்கள் செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பிலும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அண்மைய விபத்துகள் தொடர்பான விசாரணைகளில், விபத்துக்குள்ளான சில பேருந்துகள், குறிப்பாக மாற்றங்கள் செய்யப்பட்ட வாகனங்கள், உரிய வாகனத் தகுதிச் சான்றிதழ் அல்லது தேவையான அனுமதிகள் இன்றி சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
அதிகளவு கரும்புகையை வெளியேற்றும் வாகனங்கள் தொடர்பான முறைப்பாடுகளை 070-3500525 என்ற WhatsApp இலக்கத்திற்கு அனுப்புமாறும் பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது. இதன்போது வாகன இலக்கம், சம்பவம் இடம்பெற்ற திகதி மற்றும் இடம் ஆகிய விபரங்களுடன் புகைப்படங்கள் அல்லது காணொளி ஆதாரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
இதற்கு மேலதிகமாக, போக்குவரத்து தொடர்பான முறைப்பாடுகளை பொலிஸ் அவசர இலக்கமான 119, கொழும்பு அவசர அழைப்புப் பிரிவின் 0112-433333 மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் 1955 ஆகிய இலக்கங்களுக்கும் அறிவிக்க முடியும்.
பொதுவீதிகளில் வாகனங்களைச் செலுத்துவதற்கு முன்னர், அவை சட்ட விதிமுறைகள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட பாதுகாப்புத் தரங்களுக்கு அமைவாக இருப்பதை வாகன உரிமையாளர்களும் சாரதிகளும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நாடளாவிய ரீதியில் போக்குவரத்துச் சட்ட அமுலாக்க நடவடிக்கைகள் தொடரும் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.










