முதலாவது BIMSTEC சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தின் தலைவராக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் இன்று ஆரம்பமான இந்தக் கூட்டத்தில், ஏழு BIMSTEC உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெறும் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கும் வகையில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கூட்டத்தில் உரையாற்றிய இந்திய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா, பிராந்திய சுகாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் ஊடாக அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம், பொதுச் சுகாதார உட்கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாடுகள் மற்றும் டிஜிட்டல் சுகாதாரப் பராமரிப்பு முயற்சிகள் குறித்து அவர் எடுத்துரைத்ததாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
சுகாதாரப் பாதுகாப்பு, தொற்றுநோய்களுக்கான தயார்நிலை, ‘ஒரே சுகாதாரம்’ (One Health) அணுகுமுறை மற்றும் பாரம்பரிய மருத்துவம் ஆகிய துறைகளில் BIMSTEC உறுப்பு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், இந்தியாவின் நிபுணத்துவத்தையும் சிறந்த நடைமுறைகளையும் ஏனைய BIMSTEC உறுப்பு நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளத் தயாராக இருப்பதாகவும் இந்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், கூட்டு ஆராய்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் அறிவுப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கில், குஜராத் மாநிலம் ஜாம்நகரில் BIMSTEC பாரம்பரிய மருத்துவத்துக்கான சிறப்பு மையத்தை நிறுவுவதற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த முதலாவது BIMSTEC சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், மியன்மார் மற்றும் தாய்லாந்து ஆகிய ஏழு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.
பிராந்திய பொதுச் சுகாதாரப் பாதுகாப்பு, தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துதல், அவசரகால நிலைமைகளுக்கான தயார்நிலை, சுகாதாரத் தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவப் பரிமாற்றம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இக்கூட்டத்தில் கலந்துரையாடப்படுகின்றன.
இந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கும் பொறுப்பை இலங்கை ஏற்றுள்ளமை, பிராந்திய சுகாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதிலும் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான கூட்டு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதிலும் இலங்கை வகிக்கும் தலைமைத்துவப் பங்கைப் பிரதிபலிப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர், 2025 ஒக்டோபரில் கொழும்பில் நடைபெற்ற உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியக் குழுவின் 78ஆவது அமர்வின்போது, அதன் தலைவராக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நியமிக்கப்பட்டிருந்தார்.
அத்துடன், 2026 ஒக்டோபரில் தாய்லாந்தின் பாங்கொக்கில் நடைபெற்ற ஐந்தாவது ஆசிய-பசுபிக் அமைச்சர்கள் மாநாட்டிலும் (UNESCAP MC-5) அவர் உப தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.










