இலங்கையின் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளில் சுமார் 40 வீதமானவை குறிப்பிடத்தக்க அளவில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என வெரிட்டே ரிசர்ச் (Verité Research) நிறுவனத்தின் PublicFinance.lk தளத்தினால் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
எனினும், முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகளின் விகிதம் 2017ஆம் ஆண்டுக்குப் பின்னர் பதிவான அதிகூடிய மட்டத்தை எட்டியுள்ளதாகவும் அந்த மதிப்பீடு சுட்டிக்காட்டியுள்ளது.
PublicFinance.lk தளத்தின் ‘Budget Promises’ கண்காணிப்பு இணையப் பலகை ஊடாக வெளியிடப்பட்டுள்ள இந்த மதிப்பீட்டில், 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இடம்பெற்ற தலா 500 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டைக் கொண்ட 36 முக்கிய செலவின முன்மொழிவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுக்காக மொத்தம் 212.25 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது.
இதன்படி, 33 வீதமான முன்மொழிவுகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலும் 8 வீதமானவை கணிசமான அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் முழுமையாகவும் கணிசமான அளவிலும் நடைமுறைப்படுத்தப்பட்ட முன்மொழிவுகளின் மொத்த விகிதம் 41 வீதமாகப் பதிவாகியுள்ளது.
அதேவேளை, 22 வீதமான முன்மொழிவுகள் பகுதியளவில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், 14 வீதமானவற்றில் போதிய முன்னேற்றம் பதிவாகவில்லை. மேலும், 3 வீதமானவை நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
ஏனைய 19 வீதமான முன்மொழிவுகளின் நடைமுறைப்படுத்தல் முன்னேற்றம் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை. தகவல்கள் வெளியிடப்படாத முன்மொழிவுகளைத் தவிர்த்து, சுமார் 39 வீதமானவை குறிப்பிடத்தக்க அளவிலான நடைமுறைப்படுத்தலை எட்டவில்லை என மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் விகிதம் 17 வீதமாக இருந்த நிலையில், 2025ஆம் ஆண்டில் அது 33 வீதமாக அதிகரித்துள்ளது. 2017ஆம் ஆண்டு முதல் இந்தக் கண்காணிப்பு முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இதுவே பதிவான அதிகூடிய விகிதமாகும்.
மொத்தம் 12 முன்மொழிவுகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், 3 முன்மொழிவுகள் கணிசமான அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 8 முன்மொழிவுகள் பகுதியளவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், 5 முன்மொழிவுகளில் போதிய முன்னேற்றம் காணப்படவில்லை. ஒரு முன்மொழிவு நிறைவேற்றப்படாத வாக்குறுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய 7 முன்மொழிவுகளின் முன்னேற்றம் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்ட முன்மொழிவுகளில் 110 பில்லியன் ரூபா செலவில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பழைய கடன்களைத் தீர்ப்பதற்காக ஒதுக்கப்பட்ட 20 பில்லியன் ரூபா, சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டி மானியத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட 15 பில்லியன் ரூபா மற்றும் ஓய்வூதியத் திருத்தங்களுக்காக ஒதுக்கப்பட்ட 10 பில்லியன் ரூபா ஆகியவை அடங்குகின்றன.
அத்துடன், நெல் பாதுகாப்புக் கையிருப்பைப் பேணுவதற்காக ஒதுக்கப்பட்ட 5 பில்லியன் ரூபா, கிராமப்புற வீதிகள் மற்றும் பாலங்களைப் புனரமைப்பதற்கான 4 பில்லியன் ரூபா, பொதுப் போக்குவரத்தை நவீனமயப்படுத்துவதற்கான 3 பில்லியன் ரூபா மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் கொடுப்பனவை அதிகரிப்பதற்கான 1 பில்லியன் ரூபா ஆகிய முன்மொழிவுகளும் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதற்கிடையில், புதிய பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக ஒதுக்கப்பட்ட 10 பில்லியன் ரூபா, டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான 3 பில்லியன் ரூபா மற்றும் அஸ்வெசும வலுவூட்டல் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட 500 மில்லியன் ரூபா ஆகியவை பகுதியளவில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்ட முன்மொழிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
5 பில்லியன் ரூபா ஒதுக்கீட்டைக் கொண்ட ‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) வேலைத்திட்டம் கணிசமான அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட 2 பில்லியன் ரூபா, முல்லைத்தீவு வடுவாகல் பாலம் நிர்மாணத்துக்கான 1 பில்லியன் ரூபா, கிரிபாவ – எப்பாவல நீர் விநியோகத் திட்டத்துக்கான 1 பில்லியன் ரூபா மற்றும் அநுராதபுரத்தில் திடக்கழிவுகளை அகற்றும் திட்டத்துக்கான 750 மில்லியன் ரூபா ஆகிய முன்மொழிவுகளில் போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை என மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டுக் காலப்பகுதியில் அத்தியாவசிய உணவுப் பொருட்களைச் சலுகை விலையில் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட 1 பில்லியன் ரூபா தொடர்பான முன்மொழிவு நிறைவேற்றப்படாத வாக்குறுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தகவல்களை வெளிப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் வெரிட்டே ரிசர்ச் மதிப்பீடு சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி, 64 வீதமான முன்மொழிவுகள் திறந்த தகவல் அணுகல் பிரிவிலும், 28 வீதமானவை கட்டுப்படுத்தப்பட்ட தகவல் அணுகல் பிரிவிலும், 8 வீதமானவை கோரிக்கையின் பேரில் தகவல்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய பிரிவிலும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
2017ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக எந்தவொரு வரவு செலவுத் திட்ட முன்மொழிவும் ‘மூடப்பட்ட தகவல்’ பிரிவில் வகைப்படுத்தப்படவில்லை. இதன் மூலம் ஒவ்வொரு முன்மொழிவு தொடர்பாகவும் குறைந்தபட்சம் சில தகவல்களாவது கிடைக்கப்பெற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், சில முன்மொழிவுகளின் நடைமுறைப்படுத்தல் நிலையை மதிப்பிடுவதற்குப் போதுமான தகவல்கள் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 36 முன்மொழிவுகளுக்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிதியில் 81 வீதமான தொகை முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களுடன் தொடர்புடையதாகவும், மேலும் 3 வீதமான தொகை கணிசமான அளவில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களுடன் தொடர்புடையதாகவும் காணப்படுகிறது.
நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான வெளிப்படைத்தன்மையைப் பொறுத்தவரையில், மொத்த ஒதுக்கீட்டில் 91 வீதமான நிதி திறந்த தகவல் அணுகல் பிரிவில் வகைப்படுத்தப்பட்ட முன்மொழிவுகளுடன் தொடர்புடையதாக உள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அந்த ஆண்டு பெப்ரவரி மாதத்திலேயே சமர்ப்பிக்கப்பட்டதால், நடைமுறைப்படுத்துவதற்குக் கிடைத்த காலப்பகுதி குறைவாக இருந்தபோதிலும், இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் வெரிட்டே ரிசர்ச் சுட்டிக்காட்டியுள்ளது.
PublicFinance.lk தளத்தின் ஊடாக வெரிட்டே ரிசர்ச் நிறுவனம் 2017ஆம் ஆண்டு முதல் இலங்கையின் வருடாந்த வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் நடைமுறைப்படுத்தல் நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றது.
இந்நிலையில், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாளை வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் இந்த மதிப்பீட்டு அறிக்கை வெளியாகியுள்ளது. நிதி அமைச்சராகவும் செயற்படும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாளை வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்கவுள்ளார்.
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஒவ்வொரு முன்மொழிவினதும் நடைமுறைப்படுத்தல் நிலை உள்ளிட்ட விரிவான தகவல்களை PublicFinance.lk இணையத்தளத்தின் Budget Promises கண்காணிப்பு இணையப் பலகையில் பார்வையிட முடியும்.













