அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாவது கட்டத்தின் கீழ் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் நவம்பர் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
நலன்புரி நன்மைகள் சபை (Welfare Benefits Board) இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பிரதேச செயலக மட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டு, விண்ணப்பதாரர்களும் பொதுமக்களும் இணையவழியாக மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிப்பதற்கு மேலதிக கால அவகாசம் வழங்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.
2026ஆம் ஆண்டு ஒக்டோபர் 28ஆம் திகதி தகுதியான பயனாளர்களின் முதலாவது பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதியாக இன்று 11ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நவம்பர் 11ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 143,805 மேன்முறையீடுகளும், பொதுமக்களிடமிருந்து 6,478 ஆட்சேபனைகளும் பதிவாகியுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
2002ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் 11ஆம் பிரிவுக்கு அமைவாகவே மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டதாகவும், இதற்காக 10 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் எனவும் சபை குறிப்பிட்டுள்ளது.
மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்க விரும்புவோர் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://eservices.wbb.gov.lk ஊடாக அவற்றை இணையவழியில் சமர்ப்பிக்க முடியும்.
இணையவழியில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதில் தொழில்நுட்ப உதவி தேவைப்படுவோர் தத்தமது பிரதேச செயலகங்களில் இயங்கும் நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவை அணுகி உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்கள் மற்றும் உதவிகளுக்கு 1924 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும் எனவும் நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.










