இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 60 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 2041ஆம் ஆண்டளவில் 24 வீதத்தைத் தாண்டும் என கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பனிலகே இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாட்டின் முதியோர் மக்கள் தொகை அதிகரித்து வருவதால் ஏற்படும் சவால்களை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதாகவும், முதியோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
குடிசன மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் 2024ஆம் ஆண்டு மக்கள் தொகை அறிக்கையின் படி, இலங்கையில் தற்போது 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சுமார் 3.9 மில்லியன் பேர் உள்ளனர். இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 18.2 வீதமாகும்.
நாட்டின் முதியோர் மக்கள் தொகையில் 58.33 வீதமானோர் பெண்கள் எனவும், 43.67 வீதமானோர் ஆண்கள் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கையின் மக்கள் தொகை மாற்றங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், 1981ஆம் ஆண்டில் முதியோர் மக்கள் தொகையின் விகிதம் சுமார் 6 வீதமாக இருந்ததாகவும், அதன் பின்னர் வெளியிடப்பட்ட மக்கள் தொகைத் தரவுகளில் முதியோர் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மக்கள் தொகை தொடர்பான நிபுணர்களின் கணிப்புகளின்படி, இந்த அதிகரிப்பு தொடரும் எனவும், 2041ஆம் ஆண்டளவில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 24 வீதத்துக்கும் அதிகமாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டின் முதியோர் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான புதிய சட்டமொன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளும் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.










