மக்களின் அனுமதியின்றி அவர்களை புகைப்படம், காணொளி அல்லது ஒலிப்பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் தொடர்பான தனியுரிமைக் கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் கொண்ட கண்ணாடிகளை, குறிப்பிட்ட பொது இடங்களில் பயன்படுத்துவதற்கு தற்காலிகத் தடை விதிக்க நோர்வே அரசு திட்டமிட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தத் தடை முன்மொழிவு, பொதுமக்கள் அதிகளவில் கூடும் பூங்காக்கள், கடற்கரைகள், அருங்காட்சியகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் பொது நிகழ்வுகள் நடைபெறும் இடங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்குப் பொருந்தக்கூடும்.
அத்துடன், பாடசாலைகள், சிறுவர் விளையாட்டு மைதானங்கள் மற்றும் இளைஞர் கழகங்களும் இந்தத் தடையின் கீழ் கொண்டுவரப்படலாம். மருத்துவர்களின் அலுவலகங்கள், நீச்சல் தடாகங்கள் மற்றும் உடை மாற்றும் அறைகளைக் கொண்ட உடற்பயிற்சி நிலையங்கள் போன்ற தனியுரிமை முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் இத்தடைகள் நடைமுறைப்படுத்தப்படலாம்.
புதிய சக்திவாய்ந்த தொழில்நுட்பங்கள் வேகமாக அறிமுகப்படுத்தப்படுவதால், ஒருவர் அறிந்திருக்காமலேயே அவரை புகைப்படம் எடுக்கவும், காணொளி பதிவு செய்யவும் அல்லது ஒலிப்பதிவு செய்யவும் முடியும் என்ற நிலை குறித்து அரசு கவலை கொண்டுள்ளதாக நோர்வேயின் டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் பொது நிர்வாக அமைச்சர் டோர்கெய்ர் மிக்கேல்சன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், AI கண்ணாடிகளுக்கு முழுமையான தடை விதிப்பது அரசின் நோக்கம் அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட பயன்பாடு மற்றும் பிற நபர்களின் அனுமதியின்றி அவர்களைப் பதிவு செய்வதற்கான ஆபத்து இல்லாத சூழ்நிலைகளில் இத்தகைய கண்ணாடிகளை தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்கப்படும்.
எந்தெந்த சாதனங்கள் இந்தத் தடையின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்பது குறித்தும் நோர்வே அரசு ஆராயவுள்ளது. கமராக்கள் மற்றும் ஒலிப்பதிவு வசதிகளைக் கொண்ட கண்ணாடிகள், AI தொழில்நுட்பத்துடன் கூடிய கமரா கண்ணாடிகள் உள்ளிட்ட சாதனங்களும், கமரா, மைக்ரோஃபோன் அல்லது செயற்கை நுண்ணறிவு வசதிகளைக் கொண்ட உடலில் அணியும் பிற தொழில்நுட்ப சாதனங்களும் இதில் உள்ளடக்கப்படலாம்.
கமராக்கள் மற்றும் பிற பதிவு தொழில்நுட்பங்களைக் கொண்ட ஸ்மார்ட் கண்ணாடிகளால் ஏற்படக்கூடிய தனியுரிமை பாதிப்புகள் தொடர்பான சர்வதேச கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், நோர்வே அரசின் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நோர்வேயின் சிறுபான்மை அரசாங்கம் இந்த விவகாரம் தொடர்பான சட்டமூலத்தை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளது. மேலும், உடலில் அணியும் தொழில்நுட்ப சாதனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான நிரந்தர தேசிய விதிமுறைகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர் குழுவொன்றையும் அமைக்கவுள்ளது.










