-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம்-தென்மராட்சி புத்தூர் சந்திப்பகுதியில், சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில், பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வேம்பிராய் பகுதியிலிருந்து பயணித்துக்கொண்டிருந்த உழவு இயந்திரம், புத்தூர் சந்தியால் சாவகச்சேரி நோக்கி பயணிப்பதற்கு திரும்பியது. இதேவேளை சாவகச்சேரியிலிருந்து கொடிகாமம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், உழவு இயந்திரத்துடன் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் படுகாயமடைந்த நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் மிருசுவில் வடக்கைச் சேர்ந்த, வரதன் சோபிதா (வயது 37) என்ற 3 பிள்ளைகளின் தாயாரே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளைக் கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










