இலங்கைக்கு அப்பால் சர்வதேச கடற்பரப்பில் தற்போது நிலைகொண்டுள்ள ஈரானிய கப்பல்கள் தொடர்பில் அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை நிலைப்பாட்டை இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் கேள்விக்குட்படுத்தினார்.
ஈரானிய கப்பல்களுக்கு பொருட்கள் மற்றும் தேவையான விநியோகங்களை வழங்க வேண்டாம் என அரசாங்கம் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டிய ஹக்கீம், ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளுக்கு எதிரான நிலைப்பாட்டை சர்வதேச அரங்குகளில் இலங்கை முன்னர் வெளிப்படுத்தியிருந்த நிலையில், தற்போதைய நடவடிக்கை தொடர்பில் கேள்வி எழுப்பினார்.
“ஐக்கிய நாடுகள் சபையில், ‘நாங்கள் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளுக்கு எதிரானவர்கள்’ எனக் கூறி, அவர்களால் முன்வைக்கப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அவ்வாறு கூறிய பின்னர், இங்கு இப்போது அவர்கள் என்ன செய்கிறார்கள்?” என ஹக்கீம் கேள்வியெழுப்பினார்.
சர்வதேச அளவில் முன்னர் எடுத்திருந்த நிலைப்பாட்டுக்கு அமைவாகவே அரசாங்கம் செயற்படுகிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அத்துடன், இலங்கையின் பாரம்பரிய ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருந்து அரசாங்கம் விலகிச் செயற்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.
“ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக மிகவும் வலுவாகக் குரல் கொடுத்த மக்கள் விடுதலை முன்னணி (JVP) தலைமையிலான அரசாங்கம் இப்படித்தான் செயற்படுகிறதா? உங்களுக்கு வெட்கமாக இல்லையா? மாநாடுகளில் சென்று பெரிய பெரிய விடயங்களைப் பேசிவிட்டு, பின்னர் அதற்கு முற்றிலும் மாறான வகையில் செயற்படுகிறீர்கள்,” என ஹக்கீம் தெரிவித்தார்.
இதனிடையே, குறித்த ஈரானிய கப்பல்கள் தற்போது இலங்கையின் பிராந்திய கடற்பரப்புக்கு வெளியே சர்வதேச கடற்பரப்பில் நிலைகொண்டுள்ளன.
இந்தக் கப்பல்களுக்கு இலங்கை அரசாங்கம் எந்தவிதமான பொருட்கள் அல்லது வசதிகளையும் வழங்கவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பில் அமெரிக்காவிடமிருந்து தமக்கு எந்தவிதமான அறிவுறுத்தலும் கிடைக்கவில்லை என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.










