பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை கைது செய்வதைத் தவிர்க்க உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள வங்கி அதிகாரி ஒருவர் எதிர்வரும் ஒக்டோபர் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு தலைமை நீதவான் முன்னிலையில் குறித்த வங்கி அதிகாரி முன்னிலைப்படுப்பட்டதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
களனி பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் (CCD) கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
மூன்று நீதிமன்றங்களால் ஞானசார தேரருக்கு எதிராக கைது உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பில் அறிந்திருந்தும், சந்தேகநபர் தனது வாகனத்தில் ராஜகிரிய பகுதியில் இருந்து எல்பிட்டிய பகுதிக்கு ஞானசார தேரரை அழைத்துச் சென்றதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
கைது உத்தரவுகளைத் தவிர்க்க ஞானசார தேரருக்கு உதவியமை மற்றும் நீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்கத் தவறியமை தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான குற்றங்கள் தண்டனைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் இதுவரை நிறைவடையாததால், சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
இருதரப்பு சமர்ப்பணங்களையும் பரிசீலித்த தலைமை நீதவான், சந்தேகநபரை எதிர்வரும் ஒக்டோபர் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.










