இலங்கைக்கு கிழக்கே, வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு அருகில் காணப்படும் குறைந்த அழுத்தப் பிரதேசம் பிரதேசமானது இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி திருகோணமலையில் இருந்து சுமார் 600 கி.மீ. தூரத்தில், கிழக்கு திசையில் நிலைபெற்றுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, இத்தொகுதியானது இலங்கையின் கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் வடக்கே சாய்வாக வடமேற்கு நோக்கி நகர்ந்து, இன்று ஒரு ‘தாழமுக்கமாக வலுப்பெறக்கூடும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் நாளை மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு புயலாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இத்தொகுதியின் தாக்கம் காரணமாக இன்று முழுவதும் நாடு முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடுவதுடன், மேற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.









