இலங்கைக்கு வடகிழக்கு திசையில், வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக’ (Deep Depression) வலுப்பெற்றுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 அளவிலான நிலவரப்படி, இத்தொகுதியானது திருகோணமலையில் இருந்து சுமார் 640 கி.மீ தூரத்தில், வடகிழக்கு திசையில் நிலைபெற்றிருந்தது.
மேலும் இத்தொகுதியானது இலங்கையிலிருந்து விலகிச் சென்று, இன்று திங்கட்கிழமை மாலை வேளையில் தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடா கடல் பகுதியில் ‘புயலாகவும்’ , நவம்பர் 17 ஆம் திகதியளவில் மேற்கு மத்திய வங்காள விரிகுடா கடல் பகுதியில் ‘தீவிர புயலாகவும்’ வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இலங்கையில் தற்போது நிலவும் மழை நிலைமையில் இன்று முதல் குறைவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துகளைக் குறைத்துக் கொள்வதற்கு அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.









