இறக்குமதியாளர் தொடர்பான விபரங்கள் இன்றி கையடக்கத் தொலைபேசியை விற்பனைக்காக வைத்திருந்த வர்த்தகருக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் 100,000 ரூபா அபராதம் விதித்துள்ளது.
2026 செப்டம்பர் 30 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளில் நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போது, குறித்த நிறுவனத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கையடக்கத் தொலைபேசி ஒன்றில் இறக்குமதியாளர் விபரங்கள் காணப்படாமை கண்டறியப்பட்டது.
குறித்த தொலைபேசியில் இறக்குமதி செய்யப்பட்ட நாடு, இறக்குமதியாளர் அல்லது சந்தையில் பொருளை விநியோகிக்கும் நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரி, அத்துடன் கட்டாய தொடர்பு விபரங்கள் குறிப்பிடப்படவில்லை.
இதனையடுத்து, குறித்த சட்டமீறல் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபை 2026 நவம்பர் 11 ஆம் திகதி கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்திருந்தது.
2022 ஜூன் 29 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2286/26 இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள 85 ஆம் இலக்க கட்டளையின் கீழ், இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் பொதியிடல், உறையிடல் அல்லது கொள்கலன்களில் கட்டாய விபரங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.
இதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட நாடு, இறக்குமதியாளர் அல்லது சந்தையில் பொருளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரி, அத்துடன் உரிய தொடர்பு விபரங்கள் ஆகியவை இடம்பெற வேண்டும்.
கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஏனைய இறக்குமதிப் பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது, இறக்குமதியாளர் விபரங்கள், உத்தரவாத ஆவணங்கள் மற்றும் கொள்வனவு பற்றுச்சீட்டுகளைச் சரிபார்க்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக சந்தை கண்காணிப்பு மற்றும் சட்ட அமுலாக்க நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாகவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட மீறல்கள் தொடர்பில் பொதுமக்கள் அலுவலக நேரங்களில் 1977 என்ற நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும்.









