உடுதும்பறை, கரம்பகெட்டிய பகுதியில் அமைந்துள்ள மலை உச்சி ஒன்றின் கல் குகையில் தங்கியிருந்தபோது, 15 வயது சிறுமி குழந்தையைப் பெற்றெடுத்த தொடர்பான வழக்கில், குழந்தையின் தந்தை எனச் சந்தேகிக்கப்படும் 23 வயது இளைஞர் 5 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் இன்று ஞாயிற்றுக்கிழமை தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டதை அடுத்து, நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் உறவினர் எனக் கூறப்படும் 36 வயது நபர் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நக்கிள்ஸ் மலைத்தொடரின் மேற்குச் சரிவுக்கு அருகில் அமைந்துள்ள மீமுரே, கந்தகெட்டிய பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய இந்தச் சிறுமி சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போயிருந்தார்.
இது குறித்து அவரது குடும்ப உறுப்பினர்கள் அளித்த முறைப்பாட்டின் பேரில், உடுதும்பறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகரின் வழிகாட்டலின் கீழ் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
விசாரணைகளின் போது, பிராந்தியத்திலுள்ள கடை ஒன்றிலிருந்து வழக்கத்தை விட அதிகளவு அரிசியை தினமும் வாங்கிச் சென்ற இளைஞன் ஒருவர் மீது பொலிஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து குறித்த இளைஞனைப் பின்தொடர்ந்து சென்ற பொலிஸ் அதிகாரிகள், குடியிருப்புப் பகுதிகளில் இருந்து வெகு தொலைவில், காட்டில் பொலித்தீன்களால் மூடப்பட்டிருந்த கல் குகை ஒன்றைக் கண்டுபிடித்தனர்.
அங்கே இரண்டு மாத பெண் குழந்தையுடன் இந்தச் சிறுமி வசித்து வந்தமை கண்டறியப்பட்டது.
பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்த தகவல்களின்படி, சிறுமி அந்தக் குகைக்குள்ளேயே குழந்தையை பிரசவித்துள்ளார்.
பிரசவத்தின் பின்னர் குழந்தையின் நஞ்சுக்கொடி, கித்துள் தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் கூர்மையான ஆயுதத்தினால் வெட்டித் துண்டிக்கப்பட்டுள்ளது.
காட்டிலிருந்து சேகரிக்கப்பட்ட நாட்டு மருந்துகளைப் பயன்படுத்தி தாய்க்கும் குழந்தைக்கும் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதோடு, கித்துள் பாகு காய்ச்சப் பயன்படுத்தும் பாத்திரத்தில் குழந்தை நீராட்டப்பட்டுள்ளதாகச் சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞனும், அவருக்கு உதவியதாகக் கூறப்படும் உறவினரும் நேற்று சனிக்கிழமை உடுதும்பறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையில், பொலிஸ் பாதுகாப்பின் கீழ் மீட்கப்பட்ட 15 வயது சிறுமி மற்றும் இரண்டு மாத பெண் குழந்தை ஆகியோர் சுத்தப்படுத்தப்பட்டு, மேலதிக மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்காக கண்டி தேசிய மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.










