PHP மென்பொருளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இணையத்தளங்கள் மற்றும் கணினி அமைப்புகளில் காணப்படும் பாதுகாப்புக் குறைபாடுகளை உடனடியாகச் சரிசெய்யுமாறு, அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் இணையத்தள உருவாக்குநர்களுக்கும் இலங்கை கணினி அவசரத் தயார்நிலைப் பிரிவு (Sri Lanka CERT) அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒக்டோபர் 21ஆம் திகதியிட்ட அறிக்கையொன்றின் மூலம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ள இலங்கை கணினி அவசரத் தயார்நிலைப் பிரிவு, குறித்த பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமாகப் பாதிக்கப்பட்ட கணினி அமைப்புகளுக்குள் அனுமதியின்றி நுழைதல், தரவுகளைத் திருடுதல் மற்றும் நிறுவனங்களின் செயல்பாடுகளைச் சீர்குலைத்தல் போன்ற அபாயங்கள் ஏற்படக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.
இணையத்தளங்கள் மற்றும் இணையவழிப் பயன்பாடுகளை உருவாக்குவதற்குப் பரவலாகப் பயன்படுத்தப்படும் நிரலாக்க மொழியாக PHP காணப்படுகிறது. எனவே, இந்த மென்பொருளைப் பயன்படுத்தும் அமைப்புகளில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகள் இணையப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், PHP மென்பொருளைப் பயன்படுத்தும் அனைத்து கணினி அமைப்புகளையும் அடையாளம் காணுமாறும், அவற்றில் நிறுவப்பட்டுள்ள மென்பொருள் பதிப்புகளைச் சரிபார்த்து, PHP-யின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைவாகப் பாதுகாப்புப் புதுப்பிப்புகளை உடனடியாக நிறுவுமாறும் CERT அறிவுறுத்தியுள்ளது.
மேலும், கணினி அமைப்புகளின் பதிவுக் கோப்புகளை (System Logs) பரிசோதித்து, வழமைக்கு மாறான செயல்பாடுகள் ஏதேனும் இடம்பெற்றுள்ளனவா என்பதைக் கண்டறியுமாறும் நிறுவனங்களிடம் கோரப்பட்டுள்ளது. பாதுகாப்புப் புதுப்பிப்புகளை உடனடியாக மேற்கொள்ள முடியாத, அதிக ஆபத்துள்ள முக்கியமான கணினி அமைப்புகளுக்கான இணைய அணுகலைக் கட்டுப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.










