சிக்கலான இதய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 15 இலங்கைச் சிறுவர்களுக்கு காலி, கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையில் வெளிநாட்டு விசேட மருத்துவக் குழுவினரால் இலவச இதய அறுவைச் சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
‘டேக் ஹார்ட் மெர்சி மிஷன்’ (Take Heart Mercy Mission) என்ற தொண்டு நிறுவனத்தின் விசேட மருத்துவக் குழுவினர், இலங்கை மருத்துவ நிபுணர்களுடன் இணைந்து இந்தச் சிகிச்சைகளை முன்னெடுத்து வருகின்றனர். இலங்கையில் சிகிச்சையளிப்பதற்குச் சவாலான, மிகவும் சிக்கலான இதய நோய்களுக்கான அறுவைச் சிகிச்சைகள் கராப்பிட்டிய வைத்தியசாலையின் இதய மற்றும் மார்பு அறுவைச் சிகிச்சைப் பிரிவில் இடம்பெறுகின்றன.
இந்நிலையில், சுகாதாரப் பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி இன்று வியாழக்கிழமை கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு விஜயம் செய்து, முன்னெடுக்கப்படும் அறுவைச் சிகிச்சைகள் மற்றும் ஏனைய மருத்துவ நடவடிக்கைகளைப் பார்வையிட்டார்.
இதன்போது, இடம்பெற்றுக்கொண்டிருந்த இதய அறுவைச் சிகிச்சையைக் கண்காணித்த அவர், சிறுவர்களுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவையும் பார்வையிட்டார். அங்கு, சிக்கலான அறுவைச் சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்ட சிறுவர்களின் உடல்நிலை மற்றும் குணமடைதல் தொடர்பில் வெளிநாட்டு மருத்துவக் குழுவினர் அவருக்கு விளக்கமளித்தனர்.
கடந்த காலங்களில், இலங்கை மருத்துவ நிபுணர்களால் சில சிக்கலான இதய நோய்களைக் கண்டறிய முடிந்திருந்த போதிலும், அவற்றுக்குத் தேவையான அறுவைச் சிகிச்சைகளை உள்நாட்டிலேயே மேற்கொள்வதில் சிரமங்கள் காணப்பட்டதாகப் பிரதி அமைச்சர் தெரிவித்தார். உரிய நேரத்தில் அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்வதன் மூலம் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் வாழ்க்கையில் மட்டுமன்றி, அவர்களது குடும்பங்களின் எதிர்காலத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தத் திட்டம் தேவையான அனுமதிகளைப் பெற்று, இலங்கையின் சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்படுவதாகவும், இதற்கான முழுச் செலவுகளையும் தொண்டு நிறுவனம் ஏற்றுக்கொள்வதால் அரசாங்கத்துக்கு எவ்வித நிதிச் சுமையும் ஏற்படுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், சிகிச்சைகளுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களையும் அந்த நிறுவனம் வழங்கி வருகின்றது.
மேலும், சுகாதார அமைச்சின் திசு வங்கியிலிருந்து பெறப்பட்ட திசுவைப் பயன்படுத்தி, சிக்கலான இதயத் திசு மாற்று அறுவைச் சிகிச்சையொன்றும் இன்று மேற்கொள்ளப்பட்டதாகப் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தின் ஊடாக, சிக்கலான இதய அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்வதில் இலங்கை மருத்துவ நிபுணர்கள் அனுபவம், தொழில்நுட்ப அறிவு மற்றும் விசேட திறன்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக் கிடைப்பதாகவும் அவர் கூறினார்.
பிறவியிலேயே இதயக் குறைபாடுகளுடன் பிறக்கும் இலங்கைச் சிறுவர்களின் உயிரைக் காப்பாற்றும் நோக்கில் ‘டேக் ஹார்ட் மெர்சி மிஷன்’ தொண்டு நிறுவனம் 23 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தின் சர்வதேச விசேட மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய குழுவினர் ஆண்டுதோறும் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு விஜயம் செய்து, உள்ளூர் மருத்துவக் குழுவினருடன் இணைந்து சிறுவர்களுக்கு இலவசமாக உயிர்காக்கும் இதயச் சிகிச்சைகளை வழங்கி வருகின்றனர்.
இந்த விஜயத்தின்போது, கராப்பிட்டிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் பிரியந்த அத்தபத்து, ‘டேக் ஹார்ட் மெர்சி மிஷன்’ மருத்துவக் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் சுகாதாரப் பணியாளர்களும் கலந்துகொண்டனர்.










