கனமழை காரணமாக கலா ஓயா ஆற்றின் நீர்மட்டம் வெள்ள அபாய மட்டத்தை அண்மித்துள்ள நிலையில், நான்கு பிரதேசங்களுக்கு நீர்ப்பாசனத் திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை நாளை வெள்ளிக்கிழமை காலை 11.00 மணி வரை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலா ஓயா ஆற்றின் மேல் மற்றும் மத்திய நீரேந்து பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாகவும், இதனால் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், விநாடிக்கு 13,200 கனஅடிக்கும் அதிகமான நீர் கலா ஓயா ஆற்றுக்குள் வெளியேற்றப்பட்டு வருகின்றது. நீர்த்தேக்கத்துக்கு வந்து சேரும் நீரின் அளவைப் பொறுத்து, அடுத்துவரும் மணித்தியாலங்களில் வெளியேற்றப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ராஜாங்கனை, நொச்சியாகம, வண்ணாத்திவில்லுவ மற்றும் கருவலகஸ்வெவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட ஆற்றுப் பள்ளத்தாக்கை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கும் அம்பர் நிற வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள், அப்பகுதிகள் வழியாகப் பயணிக்கும் வாகன சாரதிகள் மற்றும் பயணிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், ஏற்படக்கூடிய வெள்ள அனர்த்த நிலைமையை எதிர்கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளிடமும் நீர்ப்பாசனத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.










