முல்லைத்தீவு-கேப்பாப்பிலவு பகுதியில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த, சுமார் 6.97 ஏக்கர் காணி பொதுப் பயன்பாட்டுக்காக விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.
குறித்த காணி, நேற்று புதன்கிழமை இலங்கை இராணுவத்தின் 59ஆவது படைப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளால் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காணி கையளிப்பு நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரும் அரசாங்க அதிபருமான ஏ.உமாமகேஸ்வரன் கலந்து கொண்டுள்ளார்.
தேசிய பாதுகாப்புக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் காணிகளைத் தவிர, பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள ஏனைய காணிகளைப் படிப்படியாக விடுவிக்கும் அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு விடுவிக்கப்படும் காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் மீளக் கையளித்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதே இந்தக் கொள்கையின் நோக்கமாகும்.
இதற்கிடையில், காணி விடுவிப்பு நடவடிக்கையைச் சாத்தியமாக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பாதுகாப்பு அமைச்சு, இலங்கை இராணுவம், 59ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி, பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் தொடர்புடைய அரச அதிகாரிகள் ஆகியோருக்கு முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.










