கட்டானை பகுதியில் அமைந்துள்ள செல்லப்பிராணிகள் பராமரிப்பு நிலையத்தில் கடந்த ஒக்டோபர் 8ஆம் திகதி நாய் ஒன்று தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பில், குறித்த நிலையத்தின் உரிமையாளர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த கட்டானை பொலிஸார், கடந்த ஒக்டோபர் 27ஆம் திகதி சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மற்றைய சந்தேகநபர், குறித்த செல்லப்பிராணிகள் பராமரிப்பு நிலையத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட பின்னர், தங்காலைப் பகுதியில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நிலையத்தின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு பொலிஸார் கோரியிருந்ததைத் தொடர்ந்து, இருவரும் சட்டத்தரணி ஊடாக கட்டானை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளனர்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட இருவரும் ஒக்டோபர் 28ஆம் திகதி கட்டானை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது, சந்தேகநபர்கள் இருவரையும் தலா 2 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு தனிப்பட்ட பிணைகளில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான திகதியையும் நிர்ணயித்துள்ளது.










