பணியிடங்களில் அதிகரித்து வரும் வெப்ப அழுத்தம் காரணமாக, இலங்கையில் 2023ஆம் ஆண்டு 1 இலட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான முழுநேர வேலைவாய்ப்புகளுக்கு இணையான வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1985 முதல் 2014ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியின் சராசரி நிலைமையுடன் ஒப்பிடுகையில், வெப்பநிலை அதிகரிப்பால் ஏற்பட்ட இந்த வேலை இழப்புகள் பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
‘இலங்கையில் வேலைவாய்ப்புகள் மற்றும் உற்பத்தித்திறன் மீதான வெப்ப அழுத்தத்தின் தாக்கங்கள்’ (Impacts of Heat Stress on Jobs and Productivity in Sri Lanka) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையின்படி, வெப்பநிலை அதிகரிப்பினால் 2023ஆம் ஆண்டில் இலங்கைக்கு மேலதிகமாக 6.5 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது.
வெப்ப அழுத்தம் காரணமாக இழக்கப்பட்ட வேலை நேரங்களின் அடிப்படையிலேயே இந்த வேலைவாய்ப்பு இழப்புகள் கணக்கிடப்பட்டுள்ளன. இதில் விவசாயத்துறை 48 சதவீதத்துடன் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளதுடன், சேவைத்துறை 22 சதவீதம், உற்பத்தித்துறை 13 சதவீதம், கட்டுமானத்துறை 11 சதவீதம் மற்றும் போக்குவரத்து மற்றும் வர்த்தகத்துறை 6 சதவீதம் என்ற அடிப்படையில் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும், இலங்கையில் அதிக வெப்பநிலை நிலவும் காலப்பகுதிகளில் ஒன்றான ஆண்டின் இரண்டாவது காலாண்டிலேயே மதிப்பிடப்பட்ட மொத்த வேலை இழப்புகளில் 35 சதவீதம் பதிவாகியுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.
1960களிலிருந்து இலங்கையின் சராசரி வெப்பநிலை சுமார் ஒரு பாகை செல்சியஸால் அதிகரித்துள்ளதாகவும், மழைவீழ்ச்சி முறைகள் மேலும் கணிக்க முடியாத வகையில் மாறியுள்ளதாகவும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த மூன்று தசாப்தங்களுக்கான காலநிலைத் தரவுகளும் வெப்பநிலை அதிகரிப்பு வேகமடைந்து வருவதைக் காட்டுகின்றன. அத்துடன், அதீத வெப்பநிலை நிகழ்வுகளின் அடிக்கடி நிகழும் தன்மையும் தீவிரமும் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் வேலை இழப்புகள் மேலும் அதிகரிக்கும் அபாயம்
அதிகரித்து வரும் வெப்ப அழுத்தம் காரணமாக வேலைவாய்ப்புகள் மற்றும் உற்பத்தித்திறன் மீதான பாதிப்புகள் எதிர்வரும் தசாப்தங்களில் மேலும் மோசமடையக்கூடும் என அறிக்கை எச்சரித்துள்ளது.
உலகளாவிய பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தின் அளவைப் பொறுத்து, 2040ஆம் ஆண்டளவில் இலங்கையில் ஆண்டுதோறும் 1 இலட்சத்து 45 ஆயிரம் முதல் 2 இலட்சத்து 21 ஆயிரம் வரையான முழுநேர வேலைவாய்ப்புகளுக்கு இணையான வேலை இழப்புகள் ஏற்படக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, 2060ஆம் ஆண்டளவில் இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் 1 இலட்சத்து 58 ஆயிரம் முதல் 3 இலட்சத்து 49 ஆயிரம் வரையான வேலைவாய்ப்புகளாக அதிகரிக்கக்கூடும்.
அதிக பசுமைக்குடில் வாயு வெளியேற்றம் இடம்பெறும் சூழ்நிலையில், வரலாற்று அடிப்படை நிலைமையுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் வருடாந்த பொருளாதார உற்பத்தி 15.2 சதவீதம் வரை குறைவடையக்கூடும் எனவும் அறிக்கை எச்சரித்துள்ளது.
விவசாயம் மற்றும் கட்டுமானத்துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் அதிக வெப்பநிலையில் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டியிருப்பதாலும், உடல் உழைப்பு அதிகமுள்ள வேலைகளில் ஈடுபடுவதாலும் வெப்ப அழுத்தத்தினால் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் காணப்படுவதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
தொழிலாளர்களைப் பாதுகாக்க பரிந்துரைகள்
வெப்ப அழுத்தத்தினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்து தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக, முறையான வேலை மற்றும் ஓய்வு நேர அட்டவணைகளை அறிமுகப்படுத்துதல், போதுமான குடிநீர் வசதிகளை ஏற்படுத்துதல், பணியிடங்களில் காற்றோட்டத்தை மேம்படுத்துதல், குளிரூட்டும் வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் வேலை நேரங்களை மாற்றியமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சர்வதேச தொழிலாளர் அமைப்பு பரிந்துரைத்துள்ளது.
அதிகரித்து வரும் வெப்பநிலையின் தாக்கங்களிலிருந்து இலங்கையின் தொழிலாளர் படையைப் பாதுகாப்பதற்கும், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்புகளை எதிர்கொள்ளும் நாட்டின் ஆற்றலை வலுப்படுத்துவதற்கும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறான தழுவல் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது அவசியம் என்றும் அந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
முக்கிய விளக்கம்: இந்த 1,20,300 வேலைவாய்ப்பு இழப்புகள் என்பது 1,20,300 பேர் நேரடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டனர் என்பதைக் குறிக்காது. வெப்ப அழுத்தத்தால் இழக்கப்பட்ட மொத்த வேலை நேரத்தை முழுநேர வேலைவாய்ப்புகளாகக் கணக்கிட்ட மதிப்பீடாகும். அதேபோல், 6.5 பில்லியன் டொலர் என்பது 2015ஆம் ஆண்டின் நிலையான விலைகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) இழப்பாகும்.
மூல அறிக்கை: சர்வதேச தொழிலாளர் அமைப்பின் முழுமையான அறிக்கை (PDF)










