நீண்டகாலமாக இலங்கையில் பயன்படுத்தப்பட்ட தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக, 2017ஆம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது.
12 இலக்கங்களைக் கொண்ட இந்த அடையாள அட்டையை அறிமுகப்படுத்தியதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று உற்பத்திச் செலவைக் குறைப்பதாகும்.
எனினும், பிளாஸ்டிக் அட்டைகளுக்கான தட்டுப்பாடு காரணமாக தற்போது தேசிய அடையாள அட்டைகளை அச்சிடும் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, சுமார் 10 இலட்சம் தேசிய அடையாள அட்டைகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அச்சிடும் அட்டைகள் மற்றும் அச்சு இயந்திரங்களுக்கான தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் 6 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு விண்ணப்பிக்கும் பலருக்கும் தற்போது தற்காலிக அனுமதிப்பத்திரங்களே வழங்கப்படுகின்றன.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் துஷார பெர்னாண்டோ, எதிர்வரும் நவம்பர் மாத நடுப்பகுதியில் சில அச்சு இயந்திரங்கள் கிடைக்கப்பெற்ற பின்னர், சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் திறனை இருமடங்காக அதிகரிக்க முடியும் எனத் தெரிவித்தார்.
அதன்படி, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதமளவில் சாரதி அனுமதிப்பத்திரங்களை வழமை போன்று வழங்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.










