சுற்றுலா அமைச்சின் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (28) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்களின் முன்னேற்றங்களை இதன்போது தனித்தனியாக ஆராய்ந்த ஜனாதிபதி, அது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கு வழங்கக்கூடிய உடனடித் தீர்வுகள் குறித்தும் கவனம் செலுத்தினார்.
யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் மட்டக்களப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு ஒல்லாந்து துறைமுகம் சார்ந்த பகுதியில் நடைமுறைப்படுத்தப்படும் சுற்றுலா அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், அத்தகைய திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது வரலாற்று சிறப்புமிக்க இடங்களைப் பாதுகாத்துச் செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.
கடல்வழிச் சுற்றுலாத் துறையை (Marine Tourism) மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், அதற்காக கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட புதிய திட்டங்களை தொடர்ந்தும் முன்னோக்கிச் கொண்டு செல்வதற்குத் தேவையான நிதி வசதிகளை வழங்கும் பொறிமுறையை உருவாக்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.










